ராமரின் தலைநகர் அயோத்தியில் பால ராமரின் திருவுருவம்

ராமர் கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள பால ராமர் மூலவர் சிலையின் புகைப்படம் வெளியிடப்பட்டது.
ராமரின் தலைநகர் அயோத்தியில் பால ராமரின் திருவுருவம்


அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள பால ராமர் மூலவர் சிலையின் புகைப்படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் மூலவரான பாலராமர் சிலை வரும் 22ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், பால ராமர் சிலையின் முதல் புகைப்படத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. கருப்பு நிறக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்தச் சிலை நின்ற கோலத்தில் அமைந்துள்ளது. சிலையின் கையில் தங்கத்தாலான வில், அம்பு பொருத்தப்பட்டுள்ளது. சிலைக்கு ரோஜா மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

4.25 அடி உயரம் கொண்ட இந்த பால ராமர் சிலையின் அகலம் 3 அடி. மொத்த எடை 1.5 டன். மூலவர் சிலை ராமரின் வயது 5. மூலவரின் தோற்றம் பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகளைக் கொண்டிருக்கிறது. சிலை வடிவமைக்கப்பட்ட கல்லானது, கர்நாடகத்தின் கருப்பு பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது. ராமர் சிலையின் அடித்தளமானது தாமரையில் ராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமர் சிலையைச் சுற்றியுள்ள பிரபையில், தசாவதாரம், ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்கரம், கதாயுதம், சூரியன், சந்திரன் ஆகியவை அமைந்துள்ளன.

முன்னதாக கர்நாடகத்தின் மசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகி ராஜ் வடித்த 51 அங்குலம் உயரம் கொண்ட பால ராமர் சிலை அயோத்தி கோயிலுக்கு புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. அது கோயில் கருவறையில் வியாழக்கிழமை மதியம் வைக்கப்பட்டது. மந்திர கோஷங்களுக்கு இடையே கோயிலில் சிலை வைக்கப்பட்தாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள சிலை பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கிறார். அதற்கு மறுநாள் கோயில் பொதுமக்களுக்காக திறக்கப்பட உள்ளது. 

ஒருபக்கம் ராமர் கோயில் வண்ண விளக்குகளாலும், மற்றொரு பக்கம் வண்ண வண்ண பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் தற்போதே அயோத்தியை நோக்கி வரத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

அழைக்கப்பட்ட விருந்தினர்களில் 4,000 பேர் நாடு முழுவதிலுமிருக்கும் துறவிகளும் அவர்களது சீடர்களும் ஆவர். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க, அயோத்திக்கு வருவார்கள் என கோயில் அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com