'பிரதமர் நினைத்தால் 3 நாள்களில் மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்தலாம். ஆனால்...': ராகுல் காந்தி

பிரதமர் மோடி நினைத்தால் மூன்றே நாள்களில் மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால் பாஜக அதனை விரும்பவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார். 
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி (கோப்புப்படம்)

பிரதமர் மோடி நினைத்தால் மூன்றே நாள்களில் மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால் பாஜக அதனை விரும்பவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் ஒருபகுதியாக அஸ்ஸாமின் நாகோன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் பேசியதாவது: “மணிப்பூர் மாநிலம் பல மாதங்களாக பற்றியெரிந்து வருகிறது. ஆனால் இன்றுவரை பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. இந்த சமயத்தில் காங்கிரஸ் பிரதமர் இருந்திருந்தால் மூன்றே நாள்களில் அங்கு சென்று, நான்காவது நாள் மொத்த வன்முறையையும் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பார். 

வன்முறையைக் கட்டுப்படுத்துமாறு பிரதமர் ராணுவத்திற்கு உத்தரவிட்டால், வெறும் மூன்றே நாட்களில் அவர்கள் கட்டுப்படுத்தி விடுவார்கள். பிரதமர் மோடி நினைத்தால் அவ்வாறு உத்தரவிடலாம். 

ஆனால் பாஜக இந்த வன்முறையை நிறுத்துவதற்கு விரும்பவில்லை. அதனால்தான் பிரதமர் மோடி இத்தனை நாட்களாக மணிப்பூருக்கு செல்லலாமல் இருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சியின்போது பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, கணினி மயமாக்கல், பொதுத் துறை நிறுவனங்கள் போன்றவற்றை தொடங்கி பரவலாக்கினோம். ஆனால் பாஜக வெறுப்பை மட்டுமே பரப்பி வருகிறது.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா இந்த நடைப்பயணத்தை முடக்குவதற்கு பல்வேறு விதங்களில் முயற்சித்து வருகிறார். ஆனால் நாங்கள் மோடிக்கோ, அஸ்ஸாம் முதல்வருக்கோ பயப்பட மாட்டோம்.” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com