திரிணமூல் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாட்டுக்கு விரைவில் தீர்வு: ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை

"திரிணமூல் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாட்டுப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இது தொடர்பாக அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியுடன்
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)

"திரிணமூல் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாட்டுப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இது தொடர்பாக அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்' என்று காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய "இந்தியா' கூட்டணி உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி புதன்கிழமை அறிவித்தார். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில் இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க மாநிலத்தின் சிலிகுரியில் உள்ள பாக்டோக்ரா விமான நிலையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷிடம் செய்தியாளர்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:
மம்தா பானர்ஜி இல்லாத "இந்தியா' கூட்டணியை காங்கிரஸால் நினைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் நாட்டில் பாஜகவுக்கு எதிரான போரில் அவர் இன்றியமையாதவர்.
மேற்கு வங்கத்திலும் இந்தியாவிலும் பாஜகவை தோற்கடிக்க வேண்டுமெனில் அதற்கு மம்தா பானர்ஜி மிகவும் அவசியமானவர். மம்தா மீது எங்கள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மிகவும் மதிப்பு வைத்துள்ளனர்.
"இந்தியா' கூட்டணியின் முக்கியத் தூண்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. அவரும் திரிணமூல் காங்கிரஸும் இல்லாத கூட்டணியை யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாது.
மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக மம்தா கூறியுள்ளது குறித்துக் கேட்கிறீர்கள். திரிணமூல் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாட்டுப் பிரச்னையைத் தீர்க்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இதுதொடர்பாக மம்தா பானர்ஜியுடன் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். எனவே, இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலை நீங்கி, நாங்கள் பிரச்னைக்குத் தீர்வு காண்போம்.
மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை காலை நுழைந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.
இந்த நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு அவருக்கு இரண்டு முறை அழைப்பு அனுப்பினோம். அவர் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். ஏனெனில் நாட்டில் நிலவும் அநீதியை எதிர்த்துப் போராடுவதே எங்கள் ஒரே நோக்கமாகும் என்றார்.
எனினும், மேற்கு வங்கத்தில் ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. "அதுகுறித்த தகவல் தங்களுக்கு வரவில்லை' என்று அக்கட்சி கூறியுள்ளது. எனினும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் ராகுலின் நடைப்பயணத்தில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com