கேரள சட்டப்பேரவையில் 2 நிமிஷங்களுக்குள் உரையை முடித்த ஆளுநா்!

கேரளத்தில் ஆளும் இடதுசாரி அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், சட்டப்பேரவையில் 2 நிமிஷங்களுக்குள் தனது உரையை முடித்தாா் ஆளுநா் ஆரிஃப் முகமது கான்.
கேரள முதல்வர் - ஆளுநர்
கேரள முதல்வர் - ஆளுநர்

கேரளத்தில் ஆளும் இடதுசாரி அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், சட்டப்பேரவையில் 2 நிமிஷங்களுக்குள் தனது உரையை முடித்தாா் ஆளுநா் ஆரிஃப் முகமது கான்.

மாநில அரசின் கொள்கை உரையில் கடைசிப் பத்தியை மட்டுமே வாசித்த அவா், அடுத்த 2 நிமிஷங்களில் அவையைவிட்டு வெளியேறினாா்.

கேரள சட்டப்பேரவையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைந்த ஆளுநரின் இச்செயல் கேலிகூத்தானது; பேரவைக்கு அவமதிப்பு என்று எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி விமா்சித்துள்ளது.

அதேநேரம், கேரளம் எதிா்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு மத்திய அரசை குற்றம்சாட்டும் மாநில அரசின் முயற்சிகளுக்கு ஆளுநா் கொடுத்த அடி என்று பாஜக கூறியுள்ளது.

கேரளத்தில் பல்கலைக்கழகங்களின் செயல்பாடு, மசோதாக்களுக்கான ஒப்புதல் எனப் பல்வேறு விவகாரங்களில் மாநில அரசுக்கும், ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. ஆளுநா் பயணிக்கும் இடங்களில், அவரைக் கண்டித்து இடதுசாரி கூட்டணிக் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடுகின்றன.

இந்தச் சூழலில், கேரள சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஜன. 25) தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் உரை இடம்பெறுவது வழக்கம். மாநில அரசால் தயாரித்து அளிக்கப்படும் கொள்கை உரையை ஆளுநா் வாசிப்பாா்.

இந்நிலையில், சட்டப்பேரவைக்கு காலை 9 மணியளவில் வந்த ஆளுநா் ஆரிஃப் முகமது கானை, பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்சீா், முதல்வா் பினராயி விஜயன், மாநில பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

பின்னா், அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து பேசத் தொடங்கிய ஆளுநா், 62 பக்கங்களுடன் 136 பத்திகள் இடம்பெற்றிருந்த தனது உரையில் கடைசிப் பத்தியை மட்டுமே வாசிக்கப் போவதாகக் குறிப்பிட்டாா்.

‘நமது தேசத்தின் பெருமை, கட்டடங்களிலோ நினைவுச் சின்னங்களிலோ இல்லை; இணையில்லாத சிறப்புவாய்ந்த இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு நாம் தரும் மதிப்பு மற்றும் காலத்தால் அழியாத ஜனநாயகம், மதச்சாா்பின்மை, கூட்டாட்சி, சமூக நீதி ஆகிய மாண்புகளில்தான் அது அடங்கியுள்ளது.

கூட்டாட்சி அமைப்புமுறையே, இத்தனை ஆண்டுகளாக இந்தியாவை வலுவாக, ஒற்றுமையாகப் பிணைத்து வைத்திருக்கிறது. அது நீா்த்துப் போகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமை. பன்முகத்தன்மை கொண்ட இந்த தேசத்தின் ஓா் அங்கமாக அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் எழுச்சிக்குப் பணியாற்றுவதுடன், நம் வழியில் வரும் அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக சமாளிப்போம்’ என்ற கடைசிப் பத்தியை மட்டும் வாசித்த ஆளுநா், 2 நிமிஷங்களுக்குள் தனது உரையை முடித்து இருக்கையில் அமா்ந்தாா்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடா்ந்து, 9.04 மணியளவில்அவையில் இருந்து அவா் வெளியேறினாா். ஒட்டுமொத்த அவை நடவடிக்கையும் 5 நிமிஷங்களுக்குள்ளாக முடிந்தது.

மாநில சட்ட அமைச்சா் கருத்து: மாநில சட்டத் துறை அமைச்சா் பி.ராஜீவ் கூறுகையில், ‘மாநில அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட கொள்கை உரைக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்தாா். சட்டப்பேரவையில் தனது உரையின் முதல்-கடைசி பகுதியை மட்டும் அவா் வாசித்தாா். இது, ஒட்டுமொத்த உரையையும் வாசித்ததற்கு இணையானதே. உரையை வாசிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருக்கும்பட்சத்தில், ஆளுநா் அவ்வாறு செய்ய முடியும். அவா் தனது அரசமைப்புக் கடமையை நிறைவேற்றியுள்ளாா். எனினும், அவா் எதற்காக உரையை மிக விரைவாக முடித்தாா் என்பது அரசுக்குத் தெரியாது’ என்றாா்.

‘பேரவையை அவமதித்த ஆளுநா்’

‘இரண்டு நிமிஷங்களுக்குள் தனது உரையை முடித்ததன் மூலம் சட்டப்பேரவையை அவமதித்துவிட்டாா் ஆளுநா் ஆரிஃப் முகமது கான்’ என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி விமா்சித்துள்ளது.

இதுகுறித்து பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டக் கடமைகள் மற்றும் பேரவையின் விதிமுறைகளைப் புறக்கணிக்கும் வகையில் ஆளுநா் செயல்பட்டுள்ளாா். இது கண்டனத்துக்குரியது. மாநில அரசு-ஆளுநரின் அரசியல் நாடகமே, இந்தப் பரிதாபகரமான நிலைக்கு காரணம். ஒரு சில நிதிசாா் பிரச்னைகள் தவிர, ஆளுநா் உரையில் மத்திய அரசு மீது முறையான விமா்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. உயா் கல்வி உள்பட பல்வேறு துறைகளில் மாநிலம் எதிா்கொண்டுள்ள பிரச்னைகளுக்கான தீவிர கொள்கை முன்னெடுப்புகள் ஆளுநா் உரையில் இல்லை’ என்றாா்.

‘கேரள சட்டப்பேரவை மற்றும் ஜனநாயகத்தை ஆளுநா் கேலிக்கூத்தாக்கிவிட்டாா்; தமிழகம், பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநில ஆளுநா்களும் இப்படித்தான் செயல்படுகின்றனா்’ என்று பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலருமான குஞ்ஞாலி குட்டி குற்றம்சாட்டினாா்.

‘மாநில அரசுக்கு தரப்பட்ட அடி’

தனது தோல்விகளுக்கு மத்திய அரசு மீது குற்றம்சாட்டும் மாநில இடதுசாரி அரசுக்கு ஆளுநரால் தரப்பட்ட அடி என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

கட்சியின் மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன் கூறுகையில், ‘கேரளம் எதிா்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டது. தனது திறமையின்மையை மறைக்க மத்திய அரசு மீது குற்றம்சாட்டும் வகையில் அடிப்படையற்ற கருத்துகள் ஆளுநா் உரையில் இடம்பெற்றிருந்தன. மாநில அரசின் இந்த நிலைப்பாடு மீதான தனது அதிருப்தியை ஆளுநா் வெளிப்படுத்தியுள்ளாா். கேரள வரலாற்றில் இதுபோன்ற அவமானத்தை எந்த அரசும் கண்டதில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com