வருகிற மக்களவைத் தேர்தலில் 96 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் இன்று (ஜனவரி 26) வெளியிட்டுள்ளது. பெண்கள் 47 கோடி பேர் உள்பட 96 கோடிக்கும் அதிகமானோர் வருகிற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மேற்கு வங்கத்தில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்துக்கு சிக்கல்!
இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: வருகிற மக்களவைத் தேர்தலுக்காக 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 18-லிருந்து 19 வயதுக்குட்பட்டவர்களில் 1.7 கோடிக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். 18-வது மக்களவையைத் தேர்வு செய்யும் இந்த நாடாளுமன்றத் தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க 1.5 கோடிக்கும் அதிகமான தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின்படி, இந்தியாவில் 1951 ஆம் ஆண்டு 17.32 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 1957 ஆம் ஆண்டு 19.37 கோடியாக அதிகரித்துள்ளது எனத் தெரிகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 91.20 கோடியாக இருந்தது. அதில் 18 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
முதல் மக்களவைத் தேர்தலில் 45 சதவிகித வாக்குகள் பதிவானது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 67 சதவிகித வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.