ஞானவாபி மசூதி வளாகத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்

இஸ்லாமியர்கள் ஞானவாபி மசூதி நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைத்தால் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றலாம் என பாஜக தலைவர் கூறியுள்ளார். 
ஞானவாபி மசூதி வளாகத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்


உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தை ஹிந்துக்களிடம் முஸ்லிம்கள் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே இருந்த கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மசூதி இருந்த இடத்தில் முன்பு கோயில் இருந்ததா என்பதைக் கண்டறிய, மசூதி வளாகத்தில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் சிலா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் உள்ள நீா்த்தேக்கத் தொட்டியில் சிவலிங்கம் வடிவத்தில் உள்ளதாக கூறப்படும் பகுதியைத் தவிர, பிற பகுதிகளில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்திய தொல்லியல் துறை ஆய்வு அறிக்கையின் நகல் வழக்கின் இருதரப்பினருக்கும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘17-ஆம் நூற்றாண்டில் ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் இடிக்கப்பட்ட பிரம்மாண்ட ஹிந்து கோயில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கோயில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் வெளியாகி உள்ள நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முஸ்லிம் சகோதரா்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் சமூக நல்லிணக்கம் நீடிக்கும். நாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னா், இந்தியாவில் எந்த மசூதியும் இடிக்கப்பட்டதில்லை. அதேவேளையில், பாகிஸ்தானில் ஹிந்து கோயில்கள் விட்டுவைக்கப்படுவதில்லை என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com