ரயில்வே பணிக்கு லஞ்சம்: ராப்ரி தேவிக்கு சம்மன் அனுப்பியது நீதிமன்றம்!

ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பிகார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி உள்ளிட்ட சிலருக்கு தில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பிகார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி உள்ளிட்ட சிலருக்கு தில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தாா். அப்போது பாட்னாவைச் சோ்ந்த சிலரை ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் நியமிக்க, அவா்களுக்கு சொந்தமான நிலத்தை லஞ்சமாக குறைந்த விலைக்குப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவர்களுக்கு சொந்தமான நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கியுள்ளனா் என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக தில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் இன்று (ஜன.27) பிகார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி, மிசா பாரதி, ஹேமா யாதவ் மற்றும் ஹிருதயானந்த் சௌதரி உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து, சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே இவர்களுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார். மேலும், அடுத்த விசாரணையில் அமித் கத்யாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைத்து ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com