பஞ்சாப்: சாலை விபத்துகளை குறைக்க புதிய திட்டம் அறிமுகம்!

பஞ்சாபில் சாலை விபத்துகளை குறைக்கவும், விபத்துகளால் ஏர்படும் உயிரிழப்புகளை தடுக்கவும்  ’சதக் சுரக்யா இயக்கம்’ என்ற திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய வாகனங்களை கொடியசைத்து தொடக்கி வைத்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
புதிய வாகனங்களை கொடியசைத்து தொடக்கி வைத்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

ஜலந்தர் :  பஞ்சாபில் சாலை விபத்துகளை குறைக்கவும், விபத்துகளால் ஏர்படும் உயிரிழப்புகளை தடுக்கவும்  ’சதக் சுரக்யா இயக்கம்’ என்ற திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களை கணிசமாக குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், 5000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு,  144 இலகுரக வாகனங்களும் பயன்பட்டுக்கு வந்துள்ளன. இந்த வாகனங்களில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற தேவையான முதலுதவி பொருட்கள் உள்பட பல அதிநவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த அதிநவீன கருவிகள் மூலம், போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாமல் வாகனங்களை இயக்குவோரை எளிதில் கண்காணித்து அது குறித்த தகவல்களை உடனுக்குடன் அனுப்பும் வசதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலைகளில் 30 கி.மீ தூரத்துக்கு ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று(ஜன.27) கொடியசைத்து தொடக்கி வைத்தார். தொடக்கவிழா நிகழ்ச்சியில் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியதாவது, நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக, சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் சதக் சுரக்யா இயக்கம் பஞ்சாபில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பஞ்சாபில் நாளொன்றுக்கு சாலை விபத்துக்களால் அதிகபட்சமாக 18 பேர் வரை உயிரிழப்பதாகவும், அந்த விதத்தில், மாதந்தோறும் 500 பேர் வரை உயிரிழப்பதாகவும், சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு சுமார் 6,000த்தை நெருங்கியுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

முன்னதாக, சதக் சுரக்யா திட்டத்தின் ஒரு பகுதியாக,  சாலை விபத்துகள் அதிகமாக  நடைபெற்ற பகுதிகள் குறித்த தகவல்களை  வாகன ஓட்டிகளுக்கு  வழங்கும் வகையில் ’Mappls App’ என்ற புதிய செயலியும் இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், சாலை விபத்துகள் அதிகமாக நடைபெற்ற பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, குறைந்தது 100 மீட்டர் தூரத்துக்கு முன் வாகனங்கள் அப்பகுதிகளை கடக்கும் முன், வாகன ஓட்டிகளுக்கு விபத்துப் பகுதி குறித்த எச்சரிக்கை தகவல் அவர்களுடைய தாய்மொழியிலேயே ஒலி வடிவில் அளிக்கப்படும். இந்த செயலி மூலம், வாகன ஓட்டிகள் அப்பகுதிகளை எச்சரிக்கையுடன் கடந்து செல்ல உதவியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com