
தென்கிழக்கு தில்லியில் உள்ள கல்காஜி கோயிலில் 'கீர்த்தனை' மேடை இடிந்து விழுந்ததில் 45 வயது பெண் ஒருவர் பலியானார்.
தென்கிழக்கு தில்லியில் உள்ள கல்காஜி கோயிலில் 'கீர்த்தனை' மேடை நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 45 வயது பெண் ஒருவர் பலியானார். மேலும் 17 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “நேற்று இரவு கல்காஜி கோயில் ஜாக்ரானின் போது நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.
இச்சம்பவத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார், அவரது ஆன்மா சாந்தியடையட்டும். காயமடைந்த 17 பேர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை தரப்பில் கூறியதாவது, கடந்த 26 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் மாதா ஜாக்ரான், கல்காஜி கோயிலில் உள்ள மஹந்த் பரிஷரில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் சுமார் 1,500-1,600 பேர் கூடியிருந்தனர். முக்கிய மேடைக்கு அருகில், அமைப்பாளர்கள் மற்றும் வி.ஐ.பி.க்களின் குடும்பத்தினருக்காக, மரம் மற்றும் இரும்பு சட்டத்தால் கட்டப்பட்ட உயரமான மேடை அமைக்கப்பட்டது. இந்த மேடை பாரம் தாங்காமல் திடீரென இடிந்து விழுந்தது. மேடைக்கு கீழே அமர்ந்திருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று காவல்துறை துணை ஆணையர் ராஜேஷ் தியோ தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.