நான் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே திரும்பிவிட்டேன்: நிதிஷ் குமார் பேட்டி

நான் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே திரும்பிவிட்டேன். இனி வேறு எங்கும் செல்வதற்கான கேள்விக்கே இடமில்லை என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நான் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே திரும்பிவிட்டேன்: நிதிஷ் குமார் பேட்டி


பாட்னா: "மஹாத்பந்தன்" உடனான உறவை முறித்துக் கொண்டு, ஒன்பதாவது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், நான் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே திரும்பிவிட்டேன். இனி வேறு எங்கும் செல்வதற்கான கேள்விக்கே இடமில்லை என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோத்துக் கொண்டு முதல்வா் பதவியையும் தக்கவைத்துக் கொண்டாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதிஷ்குமார், பாஜக ஆதரவுடன் மாலை முதல்வராக பதவியேற்றார்.

கடந்த 23 ஆண்டுகளில் 4-ஆவது முறையாக பாஜக கூட்டணிக்கு மாறி, 9-ஆவது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்றுள்ளார்.அவருக்கு ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் (என்டிஏ) இருந்தேன், நாங்கள் வெவ்வேறு பாதையில் சென்றோம், ஆனால் இப்போது நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், இனி ஒன்றாகவே இருப்போம். புதிய அமைச்சரவையில் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர், மீதமுள்ளவர்கள் விரைவில் பதவியேற்பார்கள். சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று நிதிஷ் குமார்  தெரிவித்தார்.

2024-இல் ஜேடியு முடிந்துவிடும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எங்கள் கட்சி பாடுபடும். நாங்கள் அதையே செய்வோம், வேறொன்றுமில்லை. தேஜஸ்வி மாநில மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இப்போது நான் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே(என்டிஏ) திரும்பிவிட்டேன், இனி வேறு எங்கும் செல்வதற்கான கேள்விக்கே இடமில்லை" என்று நிதிஷ் குமார் கூறினார்.

மாநில அரசியலில் கொந்தளிப்பு இருந்தாலும், நிதிஷ், மஹாத்பந்தன் அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (என்டிஏ) இருந்தாலும், முதல்வர் நாற்காலியைத் தக்க வைத்துக் கொண்டார், மேலும் தனது கட்சி மீண்டும் மீண்டும் தோல்வியில் இருந்து பிளவுபடாமல் பார்த்துக் கொண்டார்.

2022-இல் பாஜகவில் இருந்து பிரிந்த நிதிஷ்குமார், தேசியத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியையும் ஆளும் கட்சியையும் கூட்டாக எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொண்டார்.

2000-ஆம் ஆண்டில், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் காட்டாட்சி எதிராக பிரசாரம் செய்து முதல் முறையாக நிதிஷ் முதல்வரானார். இதுவரை 8 முறை பிகார் முதல்வராக இருந்துள்ளார்.

2013-ஆம் ஆண்டில், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 17 ஆண்டுகால  என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறினார். 

2017-இல் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடன் பெரும் கூட்டணி அமைத்து, மீண்டும் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com