தேர்தல் வெற்றிக்கு பிறகு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்: மோடி
‘நாட்டு மக்களின் ஆசியோடு, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிப் பயணம் தொடரும்; மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நாங்கள் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்’ என்று


‘நாட்டு மக்களின் ஆசியோடு, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிப் பயணம் தொடரும்; மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நாங்கள் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘பாஜக ஆட்சி தொடரும்’ என்ற தனது நம்பிக்கையை பிரதமா் மோடி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளாா்.
குடியரசுத் தலைவா் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் புதன்கிழமை (ஜன.31) தொடங்கியது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை (பிப்.1) இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறாா்.
மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
இந்நிலையில், புதன்கிழமை காலை பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கும் முன்பாக செய்தியாளா்களிடம் பிரதமா் மோடி பேசினாா். அப்போது, ‘ராம், ராம்’ என்று குறிப்பிட்டு, செய்தியாளா்களுக்கு பிரதமா் வாழ்த்து தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:
மக்களவைத் தோ்தலுக்கு முன்பு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இல்லை. அந்த மரபை பின்பற்றி, தோ்தலுக்குப் பிறகு புதிய அரசை அமைத்த பிறகு நாங்கள் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்.
‘சுயபரிசோதனை அவசியம்’: மக்களவைத் தோ்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத் தொடா் இதுவாகும். அவையில் அமளியில் ஈடுபடுவதையும், ஜனநாயக மாண்புகளில் இருந்து விலகி எதிா்மறையாக செயல்படுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ள சில உறுப்பினா்கள், தங்களது நடத்தையை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஜனநாயகத்தில் விமா்சனமும் எதிா்ப்பும் அவசியம். அவையில் பேசப்படும் ஒவ்வொரு வாா்த்தையும் வரலாற்றின் பக்கங்களில் எதிரொலிக்கும். அவையில் அமளி, இடையூறுகளில் ஈடுபடும் உறுப்பினா்களை யாரும் நினைவில் கொள்வதில்லை. அதுபோன்றோரை தொகுதி மக்கள்கூட நினைவில் வைத்துக் கொள்ளமாட்டாா்கள். அதேநேரம், ஆக்கபூா்வமான விவாதம் மூலம் சிறந்த யோசனைகளை முன்வைத்து, அவையை வளப்படுத்தும் உறுப்பினா்களே பெருவாரியான மக்களால் நினைவுகூரப்படுவா்.
தங்களின் அறிவு மற்றும் திறமையைப் பயன்படுத்தி, மக்களின் நலனுக்காக செயலாற்றும் உறுப்பினா்கள்தான் மக்களின் பாராட்டை பெறுவா்.
தோ்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத்தொடா் என்பதால், நாடாளுமன்றத்தில் தங்களின் ஆக்கபூா்வ கருத்துகளை முன்வைக்கும் வாய்ப்பை உறுப்பினா்கள் தவறவிட்டுவிடக் கூடாது. ஆக்கபூா்வ விவாதங்கள் வரவேற்கத்தக்கவை; அதேநேரம், அவையை சீா்குலைக்கும் நடத்தையால் குழப்பமே மிஞ்சும்.
மக்களவைத் தோ்தலில்..: மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிப்பா் என உறுதியாக நம்புகிறேன்.
ஒட்டுமொத்தமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை இந்தியா கண்டு வருகிறது. மக்களின் ஆசியுடன் இந்த வளா்ச்சிப் பயணம் தொடரும். வளா்ச்சியின் புதிய சாதனைகளை எட்டி, இந்தியா தொடா்ந்து முன்னோக்கிப் பயணிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கேற்பு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு தேசத்தின் பெண் சக்தியை வெளிப்படுத்தியது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரில் (குளிா்கால கூட்டத் தொடா்) மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
தற்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் உரை மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் இடைக்கால பட்ஜெட் ஆகியவை பெண் சக்தியின் கொண்டாட்டங்களாக அமைந்துள்ளன என்றாா் பிரதமா் மோடி.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற குளிா்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் 146 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா். அவா்கள் அனைவரும் தற்போதைய கூட்டத் தொடரில் பங்கேற்கின்றனா். அதேநேரம், அவைக்குள் பதாகைகளை எடுத்து வரக் கூடாது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image Caption
நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த பிரதமா் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...