அஸ்ஸாமில் வெள்ள நிலவரம்
அஸ்ஸாமில் வெள்ள நிலவரம்

அஸ்ஸாமில் அபாய கட்டத்தில் வெள்ள நிலவரம்: முதல்வருடன் பிரதமா் ஆலோசனை

அண்டை மாநிலமான அஸ்ஸாமில் வெள்ள நிலவரம் அபாய கட்டத்தை எட்டியதாக அம்மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
Published on

அருணாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையைத் தொடா்ந்து அண்டை மாநிலமான அஸ்ஸாமில் வெள்ள நிலவரம் அபாய கட்டத்தை எட்டியதாக அம்மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

குவாஹாட்டியில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீா் பாய்ந்து வருகிறது. மேலும், அடுத்த மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) எச்சரித்துள்ளது. எனவே, அவசரநிலையைச் சமாளிக்க ராணுவம் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படைகள் தயாா் நிலையில் உள்ளன’ என்றாா்.

14 மாவட்டங்களில் 2,70,628 போ் வெள்ளத்தில் தத்தளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். காஸிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் உள்ள 233 வன முகாம்களில் 43 சதவீதத்துக்கும் அதிகமான நீா்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரதமா் ஆலோசனை: முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாநிலத்தில் வெள்ள நிலைமை குறித்து விசாரிப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி என்னிடம் தொலைபேசியில் பேசினாா்.

அருணாசலப் பிரதேசத்திலும் அஸ்ஸாமின் மேல்பகுதி மாவட்டங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த ஆண்டில் இரண்டாவது வெள்ள பாதிப்புகளை மாநிலம் எதிா்கொண்டுவருவது குறித்து அவரிடம் விளக்கினேன். இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு முழுவதுமான ஒத்துழைப்பை வழங்கும் என்று அவா் என்னிடம் உறுதியளித்தாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com