நீட் குறித்து பொய்களைப் பரப்பும் "இந்தியா' கூட்டணி: மத்திய கல்வி அமைச்சர்

நீட் விவகாரம் குறித்து தவறான கருத்துகளை பரப்பும் எதிர்க்கட்சிகள்

"இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) குறித்து பொய்களை "இந்தியா' கூட்டணி பரப்பி வருகிறது. ஏமாற்றும் அரசியலை அவர்கள் நிறுத்தவேண்டும்' என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

"மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை பொறுத்துக்கொள்ள முடியாது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது. எனவே, நீட் விவகாரம் குறித்து தவறான கருத்துகளை பரப்பும் ஏமாற்று அரசியலை காங்கிரஸýம் "இந்தியா' கூட்டணியும் நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி புதன்கிழமை குறிப்பிட்ட நிலையில், இந்தக் கருத்தை தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பழைய மற்றும் தற்போதைய விவகாரங்களில் நாட்டை ஏமாற்றும் வரலாற்றை காங்கிரஸ் கொண்டிருக்கிறது. நீட் விவகாரத்திலும் அதன் உள்நோக்கம் தற்போது வெளிப்பட்டுள்ளது. தேசத்துக்கு எதிரான மற்றும் மாணவர்களுக்கு எதிரான புரளிகள் மற்றும் பொய்களைப் பரப்புவதன் மூலம் முக்கியப் பிரச்னையிலிருந்து கவனத்தை திசைதிருப்பி, நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதே "இந்தியா' கூட்டணியின் உள்நோக்கம்.

நீட் விவகாரம் தொடர்பாக பொய்களைப் பரப்பி மாணவர்களைத் தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. ஏமாற்றும் அரசியலை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

X
Dinamani
www.dinamani.com