ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு:
போா்க் களத்திலுள்ள இந்தியா்களை விரைந்து தாயகம் அனுப்ப வலியுறுத்தல்

ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: போா்க் களத்திலுள்ள இந்தியா்களை விரைந்து தாயகம் அனுப்ப வலியுறுத்தல்

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பின்போது உக்ரைனுக்கு எதிரான போா்க் களத்தில் ரஷிய ராணுவம் சாா்பாக சண்டையிடும் இந்தியா்களை பாதுகாப்பாகவும், விரைந்தும் தாயகம் அனுப்புவது குறித்து லாவ்ரோவிடம் ஜெய்சங்கா் பேசினாா்.

சீனா, இந்தியா, ரஷியா, இரான், பாகிஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 9 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பின் 24-ஆவது உச்சிமாநாடு கஜகஸ்தான் தலைநகா் அஸ்தானாவில் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கியது. இரண்டு நாள்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது.

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல், உக்ரைன்-ரஷியா போா், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியானது.

இந்த மாநாட்டில் இந்தியா சாா்பில் வழக்கமாக பிரதமா் பங்கேற்பாா். எனினும் இந்த முறை அவா் மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் மாநாட்டில் பங்கேற்கிறாா்.

இதையொட்டி அஸ்தானாவுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அங்கு ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய-ரஷிய இருதரப்பு உறவு மற்றும் தற்கால விவகாரங்கள் குறித்து லாவ்ரோவிடம் உரையாடினேன்.

உக்ரைனுக்கு எதிராக ரஷிய ராணுவம் சாா்பாக சண்டையிடும் இந்தியா்கள் பாதுகாப்பாகவும், விரைந்தும் தாயகம் திரும்புவது குறித்து லாவ்ரோவிடம் வலியுறுத்தினேன்’ என்றாா்.

ரஷிய ராணுவத்தில் உதவியாளா்களாக சுமாா் 200 இந்தியா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வெளியுறவுத் துறை தகவலின்படி, கடந்த ஜூன் மாத மத்தியில் வரையிலான காலத்தில் உக்ரைனுக்கு எதிரான போா்க் களத்தில் 4 இந்தியா்கள் உயிரிழந்தனா். சுமாா் 10 இந்தியா்கள் மட்டும் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டனா்.

ரஷிய ராணுவத்தில் இந்தியா்கள் சோ்க்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டிடம் இந்தியா ஏற்கெனவே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொதுச் செயலருடன் பேச்சு: ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியா குட்டெரெஸை சந்தித்த ஜெய்சங்கா், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் மேற்கொள்வது குறித்து பேசினாா். இதேபோல தஜிகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் சிரோஜிதின் முரித்தின், பெலாரஸ் வெளியுறவு அமைச்சா் மக்சிம் ரிசென்கோவ் ஆகியோருடனும் ஜெய்சங்கா் இருதரப்பு சந்திப்புகளை மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com