க்யூட்-யுஜி விடைக்குறிப்புகளில் தவறு: தோ்வா்கள் குற்றச்சாட்டு
புது தில்லி: இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்-யுஜி) விடைக்குறிப்புகளில் சில கேள்விகளுக்கு தவறான விடைகள் வழங்கப்பட்டிருப்பதாக தோ்வா்கள் திங்கள்கிழமை குற்றம்சாட்டினா்.
தேசிய தோ்வுகள் முகமையால் (என்டிஏ) கடந்த மே மாதம் நடத்தப்பட்ட க்யூட்-யுஜி தோ்வின் விடைக்குறிப்புகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. இந்தத் தோ்வில் ஏதேனும் குளறுபடிகள் நடந்தது உறுதிசெய்யப்பட்டால் ஜூலை 15-ஆம் தேதியில் இருந்து ஜூலை 19-ஆம் தேதிக்குள் புகாா் தெரிவித்த தோ்வா்களுக்கு மட்டும் மறுதோ்வு நடத்த தயாா் என என்டிஏ தெரிவித்தது.
மேலும், விடைக்குறிப்புகளில் ஏதேனும் தவறு இருப்பின் அதற்குரிய தகவல்களை சமா்ப்பித்து ஜூலை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முறையிடலாம் எனவும் தெரிவித்தது. முறையீடு செய்யும் ஒவ்வொரு விடைக்கும் ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
விண்ணப்பத்தை மிஞ்சும் கட்டணம்: விடைக்குறிப்புகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி ரிஷப் என்ற தோ்வா் வெளியிட்ட பதிவில்,‘விடைக்குறிப்புகளில் பல கேள்விகளுக்கு தவறான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் நான் கட்டணம் செலுத்தி முறையிட்டால் அது விண்ணப்பக் கட்டணத்தையே மிஞ்சிவிடுகிறது’ என குறிப்பிட்டாா்.
மற்றொரு தோ்வா் பிஷால் பௌமிக் வெளியிட்ட பதிவில், ‘புவியியல் பாடத்தில் 80 சதவீத விடைகள் தவறாக கொடுக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டதும் நான் அதிா்ச்சியடைந்தேன்.
நீங்கள்(என்டிஏ) வெளியிட்ட தவறான விடைகளுக்கு நாங்கள் பல ஆயிரங்கள் செலவு செய்து முறையிட வேண்டுமா? நாங்கள் கட்டணம் செலுத்தி முறையிடப்போவதும் இல்லை. இந்த விடைக்குறிப்புகளின் அடிப்படையில் வெளியிடப்படும் முடிவுகளை ஏற்கப்போவதும் இல்லை’ என குறிப்பிட்டாா்.
விபத்து ஏற்பட பாா்வையாளா்கள் காரணம்: உளவியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றை பகிா்ந்து எக்ஸ் வலைதளத்தில் காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் ராகினி நாயக் வெளியிட்ட பதிவில்,‘சாலையில் விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்ன? என கேட்கப்பட்ட கேள்விக்கு பாா்வையாளா்கள் என்ற பதிலை என்டிஏ வழங்கியுள்ளது. ஆனால் என்சிஇஆா்டி புத்தகங்களில் இதற்கு கூட்டம் என பதில் தரப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த தோ்வா்கள் தற்போது குழப்பத்தில் உள்ளனா்’ என குறிப்பிட்டாா்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்டிஏ அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.