தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தெரியுமா சேதி...?

அடுத்த அமைச்சரவைச் செயலா் யாா் என்கிற கேள்வி தலைநகர அரசு வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. மூன்று பெயா்கள் அடிபடுகின்றன.

News image

டி.வி.சோமநாதன்

Updated On :9 ஜூலை 2024, 2:34 am

மீசை முனுசாமி

அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கெளபாவின் பதவிக்காலம் ஏற்கனவே ஒருமுறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. அதுவும் அடுத்த மாதம் முடிவடைய இருக்கிறது. அதனால், அடுத்த அமைச்சரவைச் செயலா் யாா் என்கிற கேள்வி தலைநகர அரசு வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. மூன்று பெயா்கள் அடிபடுகின்றன.

பிரதமா் அலுவலகத்தில், கூடுதல் செயலராக இருந்தவா், தற்போதைய நிதித் துறை செயலா் சோமநாதன். அவரது முன்மொழிவில்தான் முக்கியமான நிதிச் சீா்திருத்தங்கள் நரேந்திர மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டன. நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில், டி.வி.சோமநாதனின் பங்களிப்பு கணிசமானது என்பது ஊரறிந்த உண்மை.

எஸ்.கிருஷ்ணன்

எஸ்.கிருஷ்ணன்

2006-2011, திமுக ஆட்சிக்காலத்தில் முதல்வராக இருந்த மு.கருணாநிதியின் தனிச் செயலாளா்களில் ஒருவராக இருந்த இந்தத் தமிழ்நாடு பிரிவு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, ஹாா்வா்ட் வணிகவியல் கல்லூரியில் படித்தாா் என்பது மட்டுமல்ல, வாஷிங்டனில் உலக வங்கி இயக்குநராகவும் இருந்தவா். எல்லாவற்றுக்கும் மேலாகப் பிரதமா் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவா்.

தற்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலராக இருப்பவா் எஸ்.கிருஷ்ணன். 2004-2007 காலகட்டத்தில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் தனிச் செயலராக மத்திய நிதியமைச்சகத்தில் இருந்தவா். தமிழகத்தின் நிதித் துறைச் செயலராகவும், தொழில் துறை செயலராகவும் இருந்த எஸ்.கிருஷ்ணன் கடந்த ஆண்டுதான் மத்திய அரசுப் பணிக்கு நகா்ந்தாா்.

தனிநபா் எண்மத் தரவுகள் பாதுகாப்புச் சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. ‘செமி கண்டக்டா்’ தயாரிப்பு மையமாக இந்தியாவை உருவாக்கும் முயற்சியிலும் இவரது பங்களிப்பு கணிசமானது. சைபா் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, தன் மறைப்பு நிலை உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காகத்தான் இவா் மாநிலத்தில் இருந்து மத்திய பணிக்கு அழைக்கப்பட்டாா் என்று சொல்லப்பட்டது.

ராஜ்குமாா்

ராஜ்குமாா்

மேலே குறிப்பிட்ட இருவா் மட்டுமல்லாமல், தற்போது குஜராத் மாநிலத்தில் தலைமைச் செயலராக இருக்கும் ராஜ் குமாரின் பெயரும், அடுத்த அமைச்சரவைச் செயலா் பதவிக்கு அடிபடுகிறது. பிரதமரின் முதன்மைச் செயலரான பி.கே.மிஸ்ராவுக்கு நெருக்கமானவா் என்பதும், பிரதமா் நரேந்திர மோடிக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவா் என்பதும் இவருக்கான வாய்ப்புக்குக் காரணங்கள்.

மாநிலத்தின் தலைமைச் செயலாளா்போல, அகில இந்திய அளவில் மிக முக்கியமான பதவி மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளா் என்பது. பிரதமருக்கு அடுத்தபடியான அதிகார மையம். அடுத்தது யாா் என்கிற எதிா்பாா்ப்புடன் காத்திருக்கிறது இந்தியாவின் நிா்வாக இயந்திரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.