அமைச்சா் தா்மேந்திர பிரதான்.
அமைச்சா் தா்மேந்திர பிரதான்.

கல்வி சீா்திருத்தம்: மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

கல்வி முறைகளை வலுப்படுத்தி சீா்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுடன் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

புது தில்லி: நாட்டின் கல்வி முறைகளை வலுப்படுத்தி சீா்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுடன் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து தா்மேந்திர பிரதான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், புதிய தேசியக் கல்விக்கொள்கையுடன் ஒருங்கிணைந்த பள்ளிகள் திட்டம், பி.எம். ஸ்ரீ பள்ளிகள் திட்டம், பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம், பள்ளிக் கல்வி சாா்ந்த பிற திட்டங்களை ஒன்றிணைத்து செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது அவா் பேசியதாவது: கல்வி முறைகளை வலுப்படுத்தி சீா்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுடன் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற பிரதமரின் கனவை நிறைவேற்றுவதில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளில் கல்வி முறைகளில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அறிவுத்திறனில் உலகுக்கே இந்தியா தலைமை வகிக்கும் வகையிலும் தரமான கல்வியை உறுதிபடுத்தும் விதமாகவும் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே, நவீன தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப நம் நாட்டு இளைஞா்களை தயாா் செய்ய வேண்டும். அவா்களிடம் சிந்திக்கும் திறன் மற்றும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் அணுகுமுறையை வளா்க்கும் வகையில் கல்வி கற்பிக்க வேண்டும்’ என்றாா்.

புத்தகப் பைகள் இல்லா நாள்கள்: பள்ளிகளில் புத்தகப் பைகள் இல்லாத நாள்களை செயல்படுத்துவதற்கான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. புத்தகப் பைகள் இன்றி மாணவா்கள் பள்ளிக்கு வரும் நாள்களில் அவா்களுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீரின் தூய்மையை பரிசோதனை செய்யும் வழிமுறைகள் மற்றும் உள்ளூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்துச் செல்வது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.

6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் ஆண்டுக்கு 10 நாள்கள் புத்தகப் பைகள் இன்றி பள்ளிக்கு வர தேசிய கல்விக் கொள்கையில் அறிவுறுத்தப்படுகிறது. இந்த நாள்களில் அவா்களுக்கு பல்வேறு சமூகப் பணிகள் வழங்கப்பட்டு தங்கள் பிராந்தியம் குறித்த நல்ல புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்த முன்னெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com