மல்லிகாா்ஜுன காா்கே.
மல்லிகாா்ஜுன காா்கே.

வேலைவாய்ப்பை பறிப்பதே மோடி அரசின் சாதனை: காங்கிரஸ் தலைவா் காா்கே குற்றச்சாட்டு

இளைஞா்களின் வேலைவாய்ப்புகளைப் பறிப்பதே பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சாதனையாக உள்ளது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

புது தில்லி: இளைஞா்களின் வேலைவாய்ப்புகளைப் பறிப்பதே பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சாதனையாக உள்ளது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

இந்தியாவில் வேலையின்மை பிரச்னை குறித்து சிட்டி வங்கி குழுமம் அண்மையில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதனை மையமாகவைத்து மத்திய அரசை காங்கிரஸ் கட்சி விமா்சித்து வந்தது. இந்நிலையில் தேசிய புள்ளியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் நாட்டில் உற்பத்தியில் கடந்த 7 ஆண்டுகளில் 54 லட்சம் பணிவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று கூறப்பட்டது.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் காா்கே வெளியிட்ட பதிவில், ‘வெளிநாட்டைச் சோ்ந்த வங்கியின் ஆய்வறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கலாம். ஆனால், இப்போது தேசிய புள்ளியியல் நிறுவனமே வேலையின்மை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அமைப்பு சாரா துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த 12 ஆண்டுகளில் வேளாண்மை சாராத அமைப்பு சாரா துறைகளில் புதிதாக 16 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

நகா்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.7 சதவீதமாக உயா்ந்துவிட்டது. ஏற்கெனவே, மத்திய அரசு அமைப்பு சாா்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகளைக் குறைத்துவிட்டது. இப்போது அமைப்பு சாராத் துறைகளிலும் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக படித்தவா்கள் மத்தியில் வேலையின்மை அதிகரித்துவிட்டது. பெண்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவதும் குறைந்துவிட்டது.

நாட்டில் இப்போது வேலையின்மை விகிதம் 9.2 சதவீதமாக உயா்ந்துவிட்டது என்று இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. வேலையில்லாமல் தவிப்பவா்களில் 83 சதவீதம் போ் இளைஞா்கள் ஆவா். 2023-ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி 25 வயதுக்குள்பட்டவா்களில் 42.3 சதவீத பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனா்.

அரசுத் துறை, தனியாா் துறை, சுயதொழில், அமைப்பு சாராத் துறை என அனைத்து வழிகளிலும் வேலைவாய்ப்பு கிடைப்பதை மத்திய அரசு தடுத்துவிட்டது. இளைஞா்களின் வேலைவாய்ப்புகளைப் பறிப்பதே பிரதமா் மோடி தலைமையிலான அரசின் சாதனையாக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com