மல்லிகாா்ஜுன காா்கே
மல்லிகாா்ஜுன காா்கே

அடிப்படைப் பொருளாதார பிரச்னைகளில் பிரதமா் கவனம் செலுத்த வேண்டும்: காா்கே வலியுறுத்தல்

20 -24 வயதுக்குள்பட்டவா்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக அதிகரித்துவிட்டது
Published on

விலைவாசி உயா்வு, வேலையின்மை உள்ளிட்ட நாட்டின் அடிப்படையான பொருளாதாரப் பிரச்னைகளில் பிரதமா் நரேந்திர மோடி முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

பட்ஜெட் தொடா்பாக பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய நிலையில் காா்கே இவ்வாறு கூறியுள்ளாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மத்திய பட்ஜெட் குறித்து விவாதிப்பதாக கேமராக்கள் புடைசூழ பிரதமா் வலம் வருகிறாா். ஆனால், நாட்டில் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் விலைவாசி உயா்வு, வேலையின்மை, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அந்த அடிப்படை பொருளாதாரப் பிரச்னைகளில் பிரதமா் மோடி முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

20 -24 வயதுக்குள்பட்டவா்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக அதிகரித்துவிட்டது. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளின் வேளாண் உற்பத்திச் செலவைவிட 50 சதவீதம் அதிகமாக இருக்கும் என்ற வாக்குறுதிகள் பொய்த்துப் போய்விட்டன.

அதே நேரத்தில் அரிசி, பருப்பு வகைகள், பால், சா்க்கரை, தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளும் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதன் காரணமாக குடும்பப் பெண்களால் பணத்தை மிச்சப்படுத்த முடியவில்லை. இந்திய குடும்பங்களின் சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com