ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தெரியுமா சேதி...?

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொள்வதும், சிலர் "செல்ஃபி' எடுத்துக் கொள்வதும், வேறு சிலர் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதுமாக இருந்தனர்.

News image
கங்கனா ரணாவத், சிராக் பாஸ்வான்
Updated On :14 ஜூலை 2024, 9:29 pm

மீசை முனுசாமி

நாடாளுமன்றம் கோலாகலமாகக் காட்சி அளித்தது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொள்வதும், சிலர் "செல்ஃபி' எடுத்துக் கொள்வதும், வேறு சிலர் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதுமாக இருந்தனர்.

ஒவ்வொரு முறை புதிய மக்களவை கூடும்போதும், மீண்டும் சந்திப்பவர்களும், புதிதாக நுழைந்தவர்களும் வளையவரும் காட்சியைப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கும். முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள், அந்தக் கட்டடத்தையும், வளாகத்தையும் பிரமிப்புடன் பார்த்து மலைப்பார்கள். அதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்திருந்த தலைவர்களை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.

என்னதான் சினிமா பிரபலமாக இருந்தாலும், அந்தக் கவர்ச்சியைவிட மேலானது நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற அதிகாரம் தரும் கவர்ச்சி. ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் இருந்து முதல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் கங்கனா ரணாவத். முதல்முறை எம்.பி. என்பதால், மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் எல்லோருடனும் கை குலுக்குவதும், தற்படம் ("செல்ஃபி') எடுத்துக் கொள்வதுமாக இருந்தார் அவர்.

அப்போது அவரது பார்வை ஒருவர் மீது பதிந்தது. புன்முறுவலுடன் அவரை நோக்கி நகர்ந்தார் நடிகை கங்கனா ரணாவத்.

அங்கே, தனது லோக் ஜனசக்தி கட்சி உறுப்பினர்களுடன் குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தார் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் சிராக் பாஸ்வான். தன்னை நோக்கி கங்கனா ரணாவத் வருவதைப் பார்த்ததும் உற்சாகமாக "ஹாய் கங்கனா' என்று அழைத்து வரவேற்றார்.

எல்லோருடைய பார்வையும் அவர்கள் இருவர் மீதும் பதிந்தன. கேமராக்கள் பளிச்சிட்டன. காட்சி ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் அவசர அவசரமாகப் படம் பிடித்தனர்.

2011-இல் சிராக் பாஸ்வான் திரைப்பட கதாநாயகனாக அறிமுகமானபோது, அந்தப் படத்தின் கதாநாயகி கங்கனா ரணாவத். திரைப்படத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழுநேர அரசியல்வாதியாகிவிட்டவர் சிராக் பாஸ்வான். திரைப்பட நடிகையாக வெற்றி வலம் வந்தார் கங்கனா ரணாவத். 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் நாடாளுமன்றத்தில் இணைந்திருக்கிறார்கள்.

அவர்கள் சேர்ந்து நடித்த திரைப்படத்தின் பெயர் என்ன தெரியுமா? "மிலே நா... மிலே ஹம்' (நாம் சந்தித்தாலும், சந்திக்காமல் போனாலும்!). சந்தித்து விட்டார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.