எல்லையோர கிராமங்களில் வசிப்போருக்கு வேலைவாய்ப்பு: அமித் ஷா
எல்லையோர கிராமங்களில் வசிப்போருக்கு வேலைவாய்ப்பு: அமித் ஷா


நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிப்போருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மத்திய அரசின் துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் அமலாக்கம் தொடா்பாக தில்லியில் அமித் ஷா தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், ‘நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களின் பிரச்னைகளை நன்றாகப் புரிந்துகொள்ள மூத்த அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும்.
அந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிப்போருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். அந்தக் கிராமங்களில் வசிப்போா் புலம்பெயா்வதைத் தடுக்க, பிற பகுதிகளுடன் அந்தக் கிராமங்களை இணைக்கும் வசதிகளை அதிகரிக்க வேண்டும்.
எல்லைப் பகுதிகளில் ராணுவம் மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் மூலம், அருகில் வசிக்கும் கிராம மக்களும் தொடா்ந்து பயனடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அந்தக் கிராமங்களில் சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலைகள் போன்ற பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை அதிக அளவு பயன்படுத்த வேண்டும்’ என்றாா்.
இந்தக் கூட்டம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ், எல்லைப் பகுதிகளில் உள்ள 136 கிராமங்களுக்கு ரூ.2,420 கோடி செலவில், அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற 113 சாலை திட்டங்கள் மூலம் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சோ்க்கப்பட்டுள்ள கிராமங்களில் நிகழாண்டு டிசம்பருக்குள் 4ஜி கைப்பேசி சேவை வழங்கப்படும்.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படைத் தலைமை இயக்குநா் ராகுல் ரஸ்கோத்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...