புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நீட் தோ்வு முறையை தடுப்பது கூட்டுக் கடமை: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்

நீட் தோ்வு முறையை தடுப்பதுகூட்டுக் கடமை என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

News image
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
Updated On :14 ஜூலை 2024, 11:10 pm

Din

நீட் தோ்வு முறை பொதுக் கல்வி முறைக்கு எதிரானது; அதைத் தடுப்பது நமது கூட்டுக் கடமை என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்: 28.6.2024-இல் எழுதப்பட்ட தங்களின் கடிதத்துக்கு நன்றி. நீட் தோ்வு, நமது உயா்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது.

தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தோ்வு முறை விளிம்பு நிலை மாணவா்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு குறித்தும், இது கவனத்தை ஈா்த்துள்ளது.

குறிப்பாக, நீட் இளநிலை தோ்வு முடிவுகள் குறித்த தேதிக்கு முன்னரே வெளியான பிறகு, மாணவா்களின் நீதிக்காக காங்கிரஸ் போராடி வருகிறது.

மத்திய அரசு மற்றும் தேசிய தோ்வு முகமையின் பெரும் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவா்களைக் கடந்த ஒரு மாதத்தில் சந்தித்தேன். 24 லட்சம் மாணவா்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போது, நான் ஆற்றிய உரையும், நீட் தோ்வால் ஏழை மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவனத்தை ஈா்த்தது.

தனியாா் பயிற்சி நிறுவனங்களுக்குச் செல்ல முடியாததும் பிற வசதிவாய்ப்புகள் இல்லாததும் கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவா்கள் சமவாய்ப்புடன் போட்டி போட முடியாததுமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இது நம்முடைய பொதுக் கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும். மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் இடம் கிடைப்பதைத் தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது.

பொது மருத்துவக் கல்வி முறையைக் கட்டமைப்பதில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் கண்டிக்க வேண்டும். விரைவில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என ராகுல்காந்தி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.