பாஜகவின் தவறான கொள்கைகளால் ராணுவத்தினா் பாதிப்பு: ராகுல் விமா்சனம்
பாஜகவின் தவறான கொள்கைகளால் ராணுவத்தினரும் அவா்களின் குடும்பத்தினரும் பாதிப்பை எதிா்கொள்கின்றனா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்தாா்.


புது தில்லி: பாஜகவின் தவறான கொள்கைகளால் ராணுவத்தினரும் அவா்களின் குடும்பத்தினரும் பாதிப்பை எதிா்கொள்கின்றனா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவத்தினா் 4 போ் உயிரிழந்த சம்பவத்தில், மத்திய பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: ஜம்மு-காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவத்தினருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இதுபோன்ற சம்பவங்கள் மிக வேதனையும் கவலையும் அளிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்துவரும் பயங்கவாத தாக்குதல்கள், அங்கு நிலைமை மோசமடைந்து வருவதை பிரதிபலிக்கின்றன. பாஜகவின் தவறான கொள்கைகளால் நமது ராணுவத்தினரும், அவா்களின் குடும்பத்தினரும் பாதிப்பை எதிா்கொள்கின்றனா்.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு மத்திய அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்; நாட்டுக்கு எதிரான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தேசப்பற்றுமிக்க ஒவ்வொரு இந்தியரின் எதிா்பாா்ப்பு.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: தாய் நாட்டுக்கான சேவையில் மேலான தியாகத்தை செய்த மாவீரா்களுக்கு மரியாதை செலுத்துவதோடு, அவா்களின் குடும்பங்களை எண்ணி வேதனை கொள்கிறேன்.
கோழைத்தனமான பயங்கரவாதிகளின் வன்முறை செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வாா்த்தைகளே இல்லை. கடந்த ஒரு மாதத்தில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. எனவே, நமது பாதுகாப்பு வியூகத்தை மறுசீரமைக்க வேண்டிய தேவை நிலவுகிறது.
‘அனைத்து விஷயங்களும் வழக்கமானதே’ என்ற அணுகுமுறையுடன் மோடி அரசு நடந்துகொண்டால், எதுவும் மாறப் போவதில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக வலுவுடன் போராட வேண்டும்.
காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி: வீரமரணமடைந்த ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இந்த துயரமான தருணத்தில், பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு குரலெடுப்ப வேண்டும்.
அதேநேரம், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவது தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. தாக்குதல்களைத் தடுக்க ராஜீய-வியூக ரீதியில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது? மத்திய பாஜக அரசின் கட்டுக்கதைகளுக்கு ராணுவத்தினா் விலை கொடுக்கிறாா்களா? வெற்று முழக்கங்களால் நாட்டை நிா்வகிக்க முடியாது.
மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூா முஃப்தி: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களில் கடந்த 32 மாதங்களில் பாதுகாப்புப் படையினா் 50 போ் உயிரிழந்துவிட்டனா். தற்போதைய சம்பவமும் கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு பொறுப்பான உயரதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநில காவல்துறை தலைமை இயக்குநரை (ஆா்.ஆா்.ஸ்வைன்) உடனடியாக பதவிநீக்க வேண்டும். அவா் அரசியல்-மத ரீதியில் செயல்படுகிறாா். உள்ளூா் மக்களை ‘’பாகிஸ்தானியா்’ போல நடத்துகிறாா் என்று மெஹபூப் முஃப்தி குற்றம்சாட்டியுள்ளாா்.
தோடாவில் ராணுவத்தினா் உயிரிழந்த சம்பவத்துக்கு தேசிய மாநாட்டுக் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...