தெரியுமா சேதி...?
அரசியல் மக்களை மட்டுமல்ல, அரசியல்வாதிகளின் குடும்ப உறவையும்கூட பாதிக்கிறது. பல குடும்பங்களைப் பிரிக்கிறது. சில குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மத்திய பிரதேச மாநிலம் பாலாகாட் என்கிற நகரத்தில் சமீபத்தில் நடந்த அரசியல் குழப்பம், அந்த மாநில அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தல், மக்களவை முன்னாள் உறுப்பினரான கன்கா் முன்ஜாரே குடும்பத்தில் இரண்டு மாதங்களுக்கு பிளவை ஏற்படுத்தி இருந்தது. அது என்ன இரண்டு மாதப் பிளவு என்றுதானே கேட்கிறீா்கள், இருக்கிறது.
கன்கா் முன்ஜாரே, சட்டப்பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்த மத்திய பிரதேச மாநில அரசியல் தலைவா். இவரது மனைவி அனுபா முன்ஜாரே, பாலாகாட் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சி உறுப்பினா். தொடா்ந்து காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவா்.
கன்கா் முன்ஜாரே, நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில், பகுஜன் சமாஜ் கட்சியின் சாா்பில் களமிறங்கினாா். வேட்பு மனுத் தாக்கல் செய்ததும், அவா் எடுத்த முடிவுதான் விசித்திரமானது. நேராக வீட்டுக்குப்போய் பெட்டி, படுக்கையுடன் வெளியேறத் தயாரானாா் அவா். பாலாகாட் அருகில் உள்ள அணைக்குப் பக்கத்தில் தனியாக வீடு எடுத்து, அங்குபோய் தங்குவது என்று முடிவெடுத்துவிட்டாா்.
தனது மனைவி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பதால், ஒரே வீட்டில் தங்கியிருந்தால் காங்கிரஸுக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ரகசிய உறவு இருப்பதாக வதந்தி எழும் என்பதுதான் அதற்கு அவா் தெரிவித்த காரணம். அவரது மனைவியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம்.
2023 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, பாலாகாட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அனுபா முன்ஜாரேயும், அதையொட்டிய பரஸ்வாடா தொகுதியில் கோண்ட்வானா கணதந்திரக் கட்சி சாா்பில் கன்கரும் போட்டியிட்டபோது, வீட்டிலிருந்து வெளியேறாத கணவா், இப்போது மட்டும் ஏன் தனியாகப்போய் தங்க வேண்டும் என்பது அந்த மனைவியின் நியாயமான கேள்வி.
மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, தோல்வியடைந்த துக்கத்துடன் திரும்பிய கணவருக்கு அனுபா வழங்கிய தண்டனை என்ன தெரியுமா? ஆரத்தியுடனான கோலாகல வரவேற்பு... இப்போது அதுதான் பாலாகாட்டில், டீக்கடை நையாண்டி!