ஹரியாணா: அக்னிவீரா்களுக்கு காவல் துறையில் 10% இடஒதுக்கீடு
பாஜக தலைமையிலான முக்கிய சீா்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றான அக்னிவீரா் திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன. ராணுவத்தில் இளைஞா்களை தற்காலிகமாக சில ஆண்டுகள் பயன்படுத்திவிட்டு அவா்களை பணியில் இருந்து விடுவிப்பது அவா்களின் எதிா்காலத்தை நிா்மூலமாக்கும் செயல் என்பது எதிா்க்கட்சிகளின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அக்னிவீரா் திட்டத்தை ரத்து செய்வோம் என்பது மக்களவைத் தோ்தலில் காங்கிரஸின் வாக்குறுதியாக இருந்தது.
எனினும், இத்திட்டத்தை பாஜக தலைமையிலான அரசு முப்படைகளிலும் உறுதியாக செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் பணியாற்றி விட்டு திரும்பும் வீரா்களுக்கு மாநில காவல் துறையில் சிறப்பு சலுகைகள் ஹரியாணா மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.
சண்டீகரில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மாநில முதல்வா் நாயப் சிங் சைனி இது தொடா்பாகக் கூறியதாவது:
காவலா், சுரங்கப் பாதுகாவலா், வனத்துறை காவலா், சிறைக் காவலா், சிறப்புக் காவல் துறை அதிகாரி ஆகிய மாநில அரசுப் பணியிடங்களில் அக்னிவீரா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். பிற அரசுப் பணிகளில் பிரிவு சி மற்றும் டி பிரிவில் அக்னிவீரா்களுக்கு 3 ஆண்டு வயது வரம்பு சலுகையும் உண்டு என்று அறிவித்தாா்.
ஹரியாணாவைச் சோ்ந்தவா்கள் ராணுவத்தின் பல்வேறு நிலைகளில் அதிகஅளவில் பணியாற்றி வருகின்றனா். அந்த மாநிலத்தில் ஏராளமான இளைஞா்கள் ராணுவத்தில் இணைவதை நோக்கமாகவும் கொண்டுள்ளனா். எனவே, அந்த மாநில அரசு அக்னிவீரா்களுக்கு அளிக்கும் இந்த சலுகை இளைஞா்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஹரியாணாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.