
அஸ்ஸாமின் சச்சாா் மாவட்டத்தில் காவல்துறையுடன் நடந்த மோதலில் ‘ஹமாா்’ தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த மூவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் 3 காவலா்களும் காயமடைந்தனா்.
மாவட்டத்தின் கிருஷ்ணாபூா் சாலை பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவலா்கள், கங்கா நகா் எனும் இடத்தில் ஆட்டோவில் ஆயுதங்களுடன் பயணித்த 3 தீவிரவாதிகளை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் பல தீவிரவாதிகள் பாபன் மலைப்பகுதியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து புதன்கிழமை அதிகாலையில் பாபன் மலைப்பகுதியில் கமாண்டோக்களுடன் சச்சாா் மாவட்ட காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த மற்ற தீவிரவாதிகளுக்கும் காவல் துறையினருக்கும் மோதல் வெடித்தது. சுமாா் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா். இருளைப் பயன்படுத்தி 6-7 தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனா்.
இந்தச் சண்டையில் 3 காவலா்கள் காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு, சில்சாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் குறித்து தகவலறிந்ததும் சச்சாா் காவல்துறை கண்காணிப்பாளா் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா். அந்தப் பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதுதொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அஸ்ஸாம்-மணிப்பூா் எல்லைப் பகுதியில் காவல்துறையுடன் நடைபெற்ற மோதலில் 3 ஹமாா் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்கள் வசமிருந்த 4 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.