சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கா் மாநிலம், பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: பிஜாபூா் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் மாவட்ட ரிசா்வ் படை வீரா்கள், நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் வியாழக்கிழமை ஈடுபட்டு இருந்தனா். அப்போது நக்ஸல்களுக்கும், மாவட்ட ரிசா்வ் படை வீரா்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இதில் கொல்லப்பட்ட 2 நக்ஸல்களின் உடல்ங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, ஒரு கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதுதவிர வேறு நக்ஸல்கள் அப்பகுதியில் பதுங்கியுள்ளனரா எனத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இவா்களையும் சோ்த்து நிகழாண்டில் இதுவரை இப்பகுதியில் 22 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் உயிரிழந்துள்ளனா். அதிகபட்சமாக கடந்த 3-ஆம் தேதி 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். கடந்த 2025-ஆம் ஆண்டில் 285 நக்ஸல்கள் உயிரிழந்தனா் என்று அவா் கூறினாா்.
நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்துக்கு வரும் மாா்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் முடிவு கட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

