
கரோனா தொற்றுப் பரவலின் போது 2020-ம் ஆண்டில் இந்திய மக்களின் வாழ்நாள் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்ததாக கூறப்படும் சமீபத்திய ஆய்வு முடிவுகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது.
சையின்ஸ் அட்வான்ஸஸ் என்ற கல்வி இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில் இந்தியாவில் கடந்த 2019 - 2020 ஆண்டுகளில் 2.6 ஆண்டுகள் வரை வாழ்நாள் குறைந்ததாகவும், சமூகத்தில் பின் தங்கிய வகுப்பினரான இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினர் கடுமையான தாக்கங்களை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அந்த ஆய்வில் வாழ்நாள் குறைவதில் ஆண்களை (2.1 ஆண்டுகள்) விட பெண்களே (3.1 ஆண்டுகள்) அதிகம் பாதிப்படைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஆய்வில் பல்வேறு குறைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், 2021-ல் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் உள்ள குடும்பங்களின் பிரதிநிதித்துவமற்ற துணைக்குழுக்களை மட்டும் பயன்படுத்தி மொத்த நாட்டிற்குமான இறப்பு விகிதங்களைப் பொதுமைப்படுத்துவதாக ஆய்வு நடத்தியவர்களை விமர்சித்துள்ளது.
வெறும் 14 மாநிலங்களில் உள்ள 23 சதவீத குடும்பங்களை மட்டும் ஆய்வு செய்வதன் மூலம் தேசிய இறப்பு சதவீதம் குறித்த துல்லியமானத் தகவல்களை வழங்கமுடியாது என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும், தரவுகளின் சார்புத்தன்மை குறித்தும், இந்த அறிக்கையில் 2015-ல் 75 சதவீதத்திலிருந்து 2020-ல் 99 சதவீதம் இறப்பு விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மத்திய அமைச்சகம் இறப்புகள் குறித்த பதிவுகளில் (சிஆர்எஸ்) 2019-ஐ விட 4,74,000 இறப்புகள் 2020-ல் அதிகரித்துள்ளதாகவும், முந்தைய ஆண்டைவிட சீராக உயர்ந்ததற்குத் தொற்றுநோய் மட்டுமே காரணம் இல்லை என்றும் கூறியுள்ளது.
கூடுதலாக, இந்தியா முழுக்க பரந்துபட்ட மக்களை உள்ளடக்கிய மாதிரிகள் பதிவுசெய்யும் அமைப்பு (எஸ்.ஆர்.எஸ்) குறிப்பிடுவது என்னவென்றால் 2019-ம் ஆண்டைவிட 2020-ல் உயிரிழப்புகள் கூடவோ குறையவோ இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
வயது மற்றும் பாலினம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்தது குறித்த ஆய்வின் கண்டுபிடிப்புகளையும் மத்திய அரசு எதிர்த்துள்ளது.
ஏனெனில், அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி கரோனா வைரஸ் பாதிப்பில் ஆண்கள் மற்றும் வயதானவர்களிடையே இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆய்வில் இளவயதினர் மற்றும் பெண்கள் அதிகமாக உயிரிழந்ததாக முரண்பட்டத் தகவலைத் தெரிவிக்கிறது.
”இதுபோன்ற சீரற்ற முரணானத் தகவல்கள் பல இந்த ஆய்வின் முடிவில் உள்ளதால், இதன் நம்பகத்தன்மை குறைந்துள்ளது” என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.