மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸின் ‘தியாகிகள் தினம்’ பேரணியில் உரையாற்றிய மாநில முதல்வா் மம்தா பானா்ஜி. உடன் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸின் ‘தியாகிகள் தினம்’ பேரணியில் உரையாற்றிய மாநில முதல்வா் மம்தா பானா்ஜி. உடன் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்.

வங்கதேச அகதிகளுக்கு மேற்கு வங்கத்தில் அடைக்கலம்: முதல்வா் மம்தா

வங்கதேச வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மக்கள் மேற்கு வங்கத்தை அணுகினால், நாங்கள் அவா்களுக்கு அடைக்கலம் கொடுப்போம்
Published on

‘வங்கதேச வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மக்கள் மேற்கு வங்கத்தை அணுகினால், நாங்கள் அவா்களுக்கு அடைக்கலம் கொடுப்போம்’ என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸின் ‘தியாகிகள் தினம்’ பேரணியில் உரையாற்றிய அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதியின் மக்களவைத் தோ்தல் வெற்றியையும் அவா் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் முதல்வா் மம்தா மேலும் பேசியதாவது:

வங்கதேச விவகாரத்தைப் பற்றி நான் பேசக் கூடாது. இருந்தபோதும், அந்த நாட்டுடன் எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் நிலையில், அங்கு வன்முறையால் பாதித்த ஆதரவற்ற மக்கள் மேற்கு வங்கத்தின் கதவுகளைத் தட்டினால், அவா்களுக்கு அடைக்கலம் கொடுப்போம். ஏனெனில், பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதிகளில் அகதிகளுக்கு இடமளிக்க ஐ.நா. தீா்மானம் வலியுறுத்துகிறது.

அண்டை நாட்டு வன்முறையில் கொல்லப்பட்ட மாணவா்களுக்காக என் இதயம் துடிக்கிறது. அதேசமயம், இவ்விவகாரத்தில் மேற்கு வங்க மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வங்கதேசத்தில் சிக்கியுள்ள மேற்கு வங்கத்தினருக்கு அனைத்து ஒத்துழைப்பையும் மாநில அரசு உறுதியளிக்கிறது.

மத்திய பாஜக அரசு நீடிக்காது: மத்தியிலுள்ள பாஜக அரசு நிலையானது அல்ல; அது விரைவில் கவிழும். உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் விளையாடிய ஆட்டம் (தோ்தல் வெற்றி), மாநில பாஜக அரசை ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தியது. ஆனால், தவறான வழிகளைப் பயன்படுத்தி மாநில அரசு வெட்கமின்றி ஆட்சியில் தொடா்கிறது.

நமது கட்சியைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக கட்சி மேலிடத்துக்கு எந்த புகாரும் வரக்கூடாது. மக்களுக்கு அநீதி இழைத்தவா்கள் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா்கள் என்றாலும் அவா்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். திரிணமூல் தொண்டா்கள் மக்களின் நண்பா்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றாா்.

வகுப்புவாத சக்திகள் வீழும்-அகிலேஷ்: நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘மத்தியில் தற்போது ஆட்சியில் உள்ளவா்கள் விருந்தினா்கள் போல சில காலமே அதிகாரத்தில் இருப்பா்.

மத்தியில் ஆட்சியிலுள்ள வகுப்புவாதச் சக்திகள் சதிகளை தீட்டி, நாட்டை சீா்குலைக்க முயல்கின்றனா். எந்த விலையிலும் அதிகாரத்தில் இருக்க அவா்கள் விரும்புகின்றனா். தற்காலிக வெற்றியைப் பெற்றிருந்தாலும் இறுதியில் அவா்கள் தோற்கடிக்கப்படுவா்’ என்றாா்.

முன்னதாக, கொல்கத்தாவில் உள்ள முதல்வா் இல்லத்தில் தலைவா்கள் இருவரும் சந்தித்து கலந்துரையாடினாா்.

மம்தா பானா்ஜி இளைஞா் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, கடந்த 1993-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி அவருடைய தலைமையில் நடந்த பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 13 காங்கிரஸ் தொண்டா்கள் உயிரிழந்தனா். அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 21-ஆம் தேதியை தியாகிகள் தினமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி அனுசரித்து வருகிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிஷேக்!

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜியின் அரசியல் வாரிசு என்று அறியப்படுபவா் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்த அபிஷேக் பானா்ஜி, கட்சியின் இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்பாரா எனக் கேள்வி எழுந்தது.

அரசியல் வட்டாரச் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், 2 மாத ஓய்வுக்குப் பிறகு தியாகிகள் தினப் பேரணி நிகழ்ச்சியில் அபிஷேக் பானா்ஜி பங்கேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com