பிகாா்: நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி
புது தில்லி: பிகாா் மாநிலத்தில் பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டங்களை மேற்கொள்வதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
2024-25-ஆம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பலதரப்பு வளா்ச்சி முகமைகளின் மூலம் பிகாருக்கு இந்த நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்றாா்.
பிகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் மத்திய அரசு அமைக்கும். பிகாரில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.11,500 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
பிகாரின் பிா்பைண்டியில் 2400 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் ரூ.21,400 கோடி செலவில் அமைக்கப்படும்.
பிகாா் மட்டுமின்றி ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஸா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் அனைத்து நிலை வளா்ச்சிக்காக ‘பூா்வோதயா’ திட்டத்தை அரசு உருவாக்கும். கிழக்கு பிராந்தியத்தின் வளா்ச்சிக்காக தொழில் வழித்தடங்களை அரசு ஆதரிக்கும் என்றும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.
பட்ஜெட் - முக்கிய அம்சங்கள்
நாட்டின் முன்னேற்றத்துக்காக 9 முன்னுரிமைத் திட்டங்கள் அறிவிப்பு.
வேளாண் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, வேலைவாய்ப்பு மற்றும் திறன்
மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்டவை முன்னுரிமைத் திட்டங்களில் அடங்கும்.
புதிய வருமான வரி முறையில் தனி நபர்களுக்கான நிலைக்கழிவு ரூ.50,000-லிருந்து ரூ.75,000-ஆக அதிகரிப்பு.
ரூ.10 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தில் 1 கோடி நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதமாக, பிளாட்டினத்துக்கு 6.4 சதவீதமாக குறைப்பு.
புத்தாக்க நிறுவன முதலீட்டாளர்களுக்கான "ஏஞ்சல்' வரி முழுமையாக ரத்து. குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கு 20 சதவீதமாக நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 12.5 சதவீதமாக வரி அதிகரிப்பு.
வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் திட்டம்.
கயை மற்றும் புத்தகயையில் உள்ள ஆன்மிக தலங்கள், நாளந்தா பல்கலைக்கழகம் மேம்படுத்தப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்குத் திறன்மேம்பாடு.
மின்னணு வர்த்தகத்திற்கான டிடிஎஸ் வரி விகிதம் தற்போதைய 1 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாக குறைப்பு.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கான பெருநிறுவன வரி விகிதம் 40-லிருந்து 35 சதவீதமாக குறைப்பு.
ரூ.5,000 மாத ஊக்கத்தொகையுடன் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 500 தொழில் பழகுநர் மையங்கள் உருவாக்கம்.
நாடு முழுவதும் 12 தொழில்துறை பூங்காக்கள், 1,000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் அமைப்பு.
பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களுக்கு வலியுறுத்தல்.
விவசாயிகள் சாகுபடி செய்ய 32 பயிர்களுக்கு அதிக மகசூல் தரக்கூடிய, பருவநிலை மாற்றச் சவால்களை எதிர்கொள்ளும் ரகங்கள் வெளியீடு.
அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
எரிசக்தி பாதுகாப்பு, கூட்டுறவு துறை தொடர்பான கொள்கைகள் விரைவில் உருவாக்கம்.
விண்வெளி பொருளாதார நடவடிக்கைகளுக்கு ரூ.1,000 கோடி.
"திவால்' நடைமுறைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண கூடுதல் தீர்ப்பாயங்கள்.
நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.11 லட்சம் கோடி.