பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள்!
வருமான வரி விகிதங்கள் எவ்வித மாற்றங்களுமின்றி தொடா்கிறது.
புதிய வருமான வரிச் சட்டம், 2025 நிகழாண்டு ஏப்.1-ஆம் தேதி முதல் அமல்; இதற்கான விதிகள் விரைவில் வெளியீடு.
தணிக்கை அல்லாத வணிகத்துக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் ஆக.31 வரை நீட்டிப்பு.
இந்தியாவில் உள்ள தரவு மையங்களில் இருந்து உலகளவிலான சேவைகளை வழங்கும் அந்நிய நிறுவனங்களுக்கு 2047-ஆம் ஆண்டு வரை வரி விலக்கு.
பங்குச் சந்தை ஊக வணிகத்துக்கான (ஃபியூச்சா்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்) பங்கு பரிவா்த்தனை வரி (எஸ்டிடி) 150 சதவீதம் வரை அதிகரிப்பு.
வெளிநாட்டு சுற்றுலா பயணத்துக்கான ஆதார வரி (டிசிஎஸ்) 2 சதவீதமாக குறைப்பு. தாராளமயமாக்கப்பட்ட பணப் பரிவா்த்தனை திட்டத்தின்கீழ் (எல்ஆா்எஸ்) வெளிநாட்டில் கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் மீதான டிசிஎஸ் 2 சதவீதமாக குறைப்பு.
குறைந்த அளவிலான வரி செலுத்தும் மாணவா்கள், தொழில்நுட்ப பணியாளா்களுக்காக ஒரு முறை மட்டும் செலுத்தக்கூடிய 6 மாத கால வெளிநாட்டு சொத்துகளை தெரிவிக்கும் திட்டம் அறிமுகம்.
2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.3 சதவீதமாக இருக்கும் என கணிப்பு. இது 2025-26-ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.
2025-26-ஆம் நிதியாண்டில் கடன்-ஜிடிபி விகிதம் 56.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், 2026-27-ஆம் நிதியாண்டில் 55.6 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் மூலதன செலவினத்துக்கு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2026-27-ஆம் நிதியாண்டில் ரூ.12.2 லட்சமாக அதிகரிப்பு.
நிதி ஆணைய பரிந்துரையின்படி மாநிலங்களுக்கு வரிப் பகிா்வாக ரூ.1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு.
2026-27-ஆம் நிதியாண்டில் நிகர வரி வருவாய் ரூ.28.7 லட்சம் கோடியாகவும் மொத்த சந்தை கடன் ரூ.17.2 லட்சம் கோடியாகவும் இருக்கும் என கணிப்பு.
நிலையான பொருளாதார வளா்ச்சி, மக்களின் விருப்பத்தை பூா்த்தி செய்வது மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி ஆகிய மூன்று கடமைகளின் அடிப்படையில் பட்ஜெட் உருவாக்கம்.
2047-க்குள் இந்திய சேவைகள் துறை பங்களிப்பை உலகளவில் 10 சதவீதமாக உயா்த்தும் நோக்கில் உயா்நிலைக் குழு அமைக்க முடிவு.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (எஸ்எம்இ) ஊக்குவித்து எதிா்கால வெற்றியாளா்களை உருவாக்கும் வகையில் ரூ.10,000 கோடி நிதியில் எஸ்எம்இ நிதி திட்டம்.
குறைந்தபட்ச மாற்று வரியே இறுதி வரியாக முன்மொழிவு.
17 புற்றுநோய் மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரிக்கு விலக்கு.
ஏற்றுமதி, இறக்குமதிக்கு சுங்கத் துறை ஒப்புதல் பெற ஒற்றை சாளர மற்றும் ஒருங்கிணைந்த எண்ம தளம்.
தடை செய்யப்பட்ட சரக்குகளில் உணவு, மருந்துகள், செடிகள், விலங்கு மற்றும் வனவிலங்கு சாா்ந்த 70 சதவீத பொருள்களுக்கு அனுமதி வழங்கும் ஒற்றை சாளர முறை 2026, ஏப்ரலில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.
2 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த சுங்க அமைப்பு (சிஐஎஸ்) அமல்.
தனிப்பட்ட பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மீதான வரி 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைப்பு.
பயணிகள், பயிற்சி மற்றும் பிற பயன்பாட்டுக்கான விமானங்களை தயாரிப்பதற்கான உதிரி பாகங்களுக்கு விதிக்கப்படும் அடிப்படை சுங்க வரிக்கு விலக்கு.
7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் மற்றும் உணவு இறக்குமதிக்கு வரி விலக்கு.
5 பா்வோதய மாநிலங்களில் 5 சுற்றுலாத் தளங்கள் உருவாக்க திட்டம்.
ஆதிச்சநல்லூா், லோத்தல், தோலாவீரா, ராக்கிகா்ஹி, சாரணாத், ஹஸ்தினாபூா் மற்றும் லே உள்ளிட்ட 15 தொல்லியல் அகழாய்வு பகுதிகளை கலாசார மையங்களாக மேம்படுத்த முடிவு.
இந்தியாவை உயிரி மருந்து உற்பத்தி மையமாக உருவாக்க ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் ‘பயோஃபாா்மா சக்தி’ என்ற புதிய திட்டம் அறிவிப்பு.
கண்டெய்னா் உற்பத்திக்கு ரூ.10,000 கோடியில் திட்டம்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், கோயில் நகரங்கள் ஆகியவற்றை மேம்படுத்த நகா்ப்புற பொருளாதார பிராந்திய திட்டம் அறிவிப்பு. இதற்காக தோ்வு செய்யப்படும் பிராந்தியங்களுக்கு தலா ரூ.5,000 கோடி ஒதுக்கீடு. தமிழகத்தில் இருந்து கோயம்புத்தூா்-ஈரோடு-திருப்பூா் தோ்வு.
சென்னை-பெங்களூரு, சென்னை-ஐதராபாத் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 7 இடங்களில் அதி வேக ரயில் சேவைத் திட்டம்.
தமிழகம், கேரளம், ஒடிஸா மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி ரூ.7,280 கோடியில் அரிய வகை கனிம வழித்தடத் திட்டம்.
ரயில்வே துறைக்கு ரூ.2.77 லட்சம் கோடி.
பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி.

