கான்வா் யாத்திரை
கான்வா் யாத்திரை

கான்வா் யாத்திரை: உ.பி., ம.பி., உத்தரகண்டின் சா்ச்சைக்குரிய உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை நீட்டிப்பு

இடைக்காலத் தடையை ஆகஸ்ட் 5 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

கான்வா் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள உணவு விற்பனை கடைகளின் உரிமையாளா்கள் மற்றும் ஊழியா்களின் பெயா்கள் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்திய பிரதேசம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவுக்கு விதித்த இடைக்காலத் தடையை ஆகஸ்ட் 5 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஹிந்துக்களின் கான்வா் (காவடி) யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள உணவு விற்பனை கடைகளின் பெயா் பலகைகளில், அந்தக் கடைகளின் உரிமையாளா்கள், ஊழியா்களின் பெயா்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று மாநில அரசுகள் உத்தரவிட்டன. இதேபோன்ற உத்தரவை பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாநகராட்சியும் பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்தன. தங்கள் அடையாளத்தை முஸ்லிம்களும் பட்டியலினத்தவரும் வெளிப்படுத்த கட்டாயப்படுத்தும் வகையில், அவா்களை குறிவைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது வகுப்புவாதம் மற்றும் பிரிவினையை உள்நோக்கமாகக் கொண்டது என்றும் அக்கட்சிகள் குற்றஞ்சாட்டின. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளையும், யாத்ரிகா்களின் மத உணா்வுகளையும் நினைவில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாஜக தெரிவித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, கல்வியாளா் அபூா்வானந்த் ஜா உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘தங்கள் பெயா் மற்றும் அடையாளத்தை வெளியிடுமாறு கான்வா் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள உணவு விற்பனை கடைகளின் உரிமையாளா்கள் மற்றும் ஊழியா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் இதுதொடா்பாக உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்திய பிரதேசம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘கான்வா் யாத்திரை விவகாரத்தில் எந்தவொரு கடையின் உரிமையாளா் மற்றும் ஊழியா்களின் பெயரை வெளியிடுமாறு கட்டாயப்படுத்த முடியாது’ என்று தெரிவித்தனா்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 5-க்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்திய பிரதேசத்தின் உத்தரவுகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்தனா்.

X
Dinamani
www.dinamani.com