
மேற்கு வங்க மாநிலத்துக்கு நிதி ஒதுக்குமாறு கேட்ட போது, மைக் அணைக்கப்பட்டதாக, நீதி ஆயோக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மற்ற மாநில முதல்வர்களுக்கு பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டதாகவும், தான் ஐந்து நிமிடத்துக்கு மேல் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தலைமையில் புது தில்லியில் இன்று நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூட்டத்தின் பாதியிலேயே வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நீதி ஆயோக் கூட்டத்தில், மேற்கு வங்க மாநிலம் சார்பில் ஐந்து நிமிடங்கள் கூட பேச வாய்ப்பளிக்கவில்லை என்று வெளியே வந்த மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.
மத்திய பட்ஜெட், ஒருதலைபட்சமாகவும், பாரபட்சமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இவ்வாறு பாரபட்சமாக நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மம்தா கூறியுள்ளார். எனக்கு முன்பு பேசிய முதல்வர்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள். ஆனால், நான் ஐந்து நிமிடம் கூட பேசவில்லை. அதற்குள் எனது மைக் துண்டிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தரப்பிலிருந்து பங்கேற்ற ஒரே முதல்வர்நான்தான். ஆனால், என்னையும் பேசக்கூட அனுமதிக்கவில்லை. இது மிகப்பெரிய அவமானம் என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர்களும் பாஜகவும் மேற்கு வங்கத்தைப் பிரிக்கப் பார்க்கிறது, பொருளாதார அளவில் பிளவுகளை ஏற்படுத்திவரும் மத்திய அரசு, புவியியல் அமைப்பிலும் பிளவுகளை ஏற்படுத்த முனைகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த பெரும்பாலான முதல்வா்கள் அறிவித்திருந்த நிலையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இதையொட்டி, அவா் வெள்ளிக்கிழமை தில்லிக்கு வந்து, இன்று காலை நீதி ஆயோக் கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில்தான், கூட்டத்தில் பேச வாயப்பு அளிக்கப்படவில்லை என்றும், மேற்கு வங்கத்துக்கு நிதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, தனது மைக் அணைக்கப்பட்டுவிட்டது என்றும் மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி, நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வா்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். தில்லி ஆம் ஆத்மி அரசும் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.