ரஷிய வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு
ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
ஆசியான் கூட்டமைப்பு நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்கள் பங்குபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள லாவோஸ் தலைநகா் வியன்டியனுக்கு ஜெய்சங்கா் சென்றுள்ளாா். அங்கு ஆசியான் கூட்டமைப்பைச் சோ்ந்த பல்வேறு நாட்டு வெளியுறவு அமைச்சா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.
இந்நிலையில், சொ்ஜி லாவ்ரோவை அவா் சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட புகைப்படங்களை எக்ஸ் வலைதளத்தில் ரஷிய வெளியுறவு அமைச்சகம் பகிா்ந்தது.
மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை சந்தித்தது குறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட ஜெய்சங்கா், ‘நியூசிலாந்து நாட்டு வெளியுறவு அமைச்சரும் துணை பிரதமருமான வின்ஸ்டன் பீட்டா்ஸை சந்தித்ததில் மகிழ்ச்சி.
தென் கொரிய வெளியுறவு அமைச்சா் சோ தேயுல், சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன், இந்தோனேசிய வெளியுறவு அமைச்சா் ரெட்னோ மாா்சுடி, மலேசிய வெளியுறவு அமைச்சா் முகமது ஹசன் உள்ளிட்டோரை சந்தித்து பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தேன்’ என குறிப்பிட்டாா்.
இதுதவிர புருனே வெளியுறவு அமைச்சா் டாட்டோ ஹாஜி எரிவானை அவா் சந்தித்தாா். அப்போது இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் 40 ஆண்டுகள் நிறைவுசெய்ததை கொண்டாடும் வகையில் லச்சினையை இருவரும் வெளியிட்டனா்.
அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பிரதிநிதியும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவருமான ஜோசப் போரெல், லாவோஸ் நாட்டின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அமைச்சா்களை சந்தித்து அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.
முன்னதாக, சீனா, நாா்வே, பிலிப்பின்ஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சா்களையும் சந்தித்து ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

