

மகாராஷ்டிரத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த 43 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் நல்லா சோபாரா பகுதியைச் சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், குற்றவாளியான ஃபிரோஸ் நியாஸ் ஷேக் (43) தானே மாவட்டத்தில் கடந்த ஜூலை 23 அன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளியை திருமண வரன் பார்க்கும் இணையதளத்தின் மூலம் சந்தித்து திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் அவர் ஏமாற்றிச் சென்றதாகவும் புகாரில் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறை ஆய்வாளர் விஜய்சிங் பாகல் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், குற்றவாளி ஷேக் அந்தப் பெண்ணிடமிருந்து பணம், மடிக்கணினி மற்றும் விலையுயர்ந்த பொருள்கள் என ரூ.6.5 லட்சம் மதிப்பிலான பொருள்களை ஏமாற்றி திருடிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட மடிக்கணினி, ஸ்மார்ட் போன்கள், ஏடிஎம் கார்டுகள், நகைகள் மற்றும் பொருள்களை மீட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளி ஷேக் திருமண வரன் பார்க்கும் இணையதளத்தில் விவாகரத்தான மற்றும் விதவைப் பெண்களைக் குறிவைத்து பேசி, அவர்களைத் திருமணம் செய்துகொண்டு அவர்களின் நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை ஏமாற்றி வந்துள்ளார்.
இதுபோல, கடந்த 2015-ல் இருந்து நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம், தில்லி மற்றும் குஜராத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஷேக் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.