
மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்கா மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்திருக்கும் வனப்பகுதியில், சங்கிலியால் மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த 50 வயதுடைய அமெரிக்கப் பெண்ணை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வனப்பகுதிக்குள் சென்று கால்நடைகளை மேய்த்து வருபவர், அப்பெண்ணின் கதறலைக் கேட்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததைத் தெர்டர்ந்து அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். அவர் காப்பாற்றப்படுவதற்கு சுமார் 48 மணி நேரத்துக்கு முன்பு மரத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தெரிவிக்கிறது.
அமெரிக்க பெண்ணிடம், அமெரிக்க பாஸ்போர்ட் மற்றும் தமிழக முகவரியில் ஆதார் அட்டையின் நகல்களும் இருந்துள்ளன. அதில், அவர் பெயர் லலிதா கயி என்று அச்சிடப்பட்டுள்ளது. அவர் பேசும் நிலையில் இல்லாததால், உடனடியாக அவர் கோவாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பெண்ணின் கைப்பையில் ஒரு காகிதம் இருந்ததாகவும், அதில் தனது முன்னாள் கணவர் என அவர் எழுதி வைத்திருப்பதும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். நாங்கள் வனப்பகுதியிலிருந்து ஒரு பெண்ணை மீட்டுள்ளோம். அவரைப் பார்க்க அமெரிக்காவில் பிறந்தவர் போல இருக்கிறார், சிறிது காலம் அவர் கோவாவில் வசித்தள்ளார், கடந்த சில மாதங்களாக அவர் யாருடனெல்லாம் பேசியிருக்கிறார் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல நாள்களாக சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் இருந்ததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவரது வலது கால் மட்டும், இரும்புச் சங்கிலியால், மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அவர் கட்டப்பட்டிருந்த பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததாலும், சில நாள்களாக அவர் உணவு சாப்பிடாததாலும் அவரால் பேசக்கூட முடியாத நிலையில்தான் மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது உடல்நிலை சீரடைந்து வந்தாலும், அவருக்கு மனரீதியான பிரச்னைகள் இருக்கலாம் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் காவல்துறையிடம் தெரிவித்திருப்பதாகவும், அவரது கைப்பையிலிருந்து சில மருத்துவப் பரிந்துரைகளையும் காவல்துறையினர் கண்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
அவரது விசா காலம் முடிவடைந்துவிட்ட நிலையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்தியாவில் வாழ்ந்து வந்திருக்கலாம் என்றும், ஒரு சில நாள்களுக்குப் பிறகே அவரிடம் காவல்துறையினர் பேசி என்ன நடந்தது என்பதை விசாரிக்கவிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.