

சிக்கிம் மாநிலத்தில் பாஜக 5.18% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்திலுள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 58.38 சதவீத வாக்குகளையும், சிக்கிம் ஜனநாயக முன்னணி 27.37 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
சிக்கிம் மாநில பாஜக தலைவர் டில்லி ராம் தாபா, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் வேட்பாளர் கலா ராய்யிடம் 2,968 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். வடக்கு பர்டக் தொகுதியில் கடந்தமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த தாபா, 3,755 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராய் 6,723 வாக்குகளைப் பெற்றார்.
சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த டி.பி. தாபா 1,623 வாக்குகளைப் பெற்றார். சிட்டிசன் ஆக்ஷன் கட்சியின் வேட்பாளர் பி.கே. தமாங் 581 வாக்குகளைப் பெற்றார்.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 தொகுதிகளில் லாச்சென் மங்கன் தவிர்த்து 31 இடங்களில் பாஜக களம் கண்டது.
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாலும், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததாலும், இம்முறை தேர்தலில் பாஜக தனித்து களமிறங்கியது. மாநிலத்தில் தனித்து போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வியடைந்தது.
கடந்த சட்டப்பேரவையில் பாஜக 12 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருந்தது. இவற்றில் 10 பேர் சிக்கிம் ஜனநாயக முன்னணியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்கள். எஞ்சியுள்ள இரண்டு பேரும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா உடனான கூட்டணியின்போது 2019ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் (இடைத்தேர்தல்) வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1994ஆம் ஆண்டு முதல் சிக்கிம் மாநிலத்தில் பாஜக போட்டியிட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.