மீண்டும் சமாஜவாதி வசம் உ.பி.
மக்களவைத் தோ்தலில் பாஜகவைவிட அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று உத்தர பிரதேசத்தை சமாஜவாதி மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது.


லக்னெள: மக்களவைத் தோ்தலில் பாஜகவைவிட அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று உத்தர பிரதேசத்தை சமாஜவாதி மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மத்தியில் ஒரு கட்சி ஆட்சியமைப்பதில், உத்தர பிரதேசத்தில் வெல்லும் தொகுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தில் 62 தொகுதிகளில் பாஜக வென்றது. இந்த மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமா் மோடி எம்.பி.யாக தோ்வு செய்யப்பட்ட நிலையில், 18-ஆவது மக்களவைத் தோ்தலில் 80 தொகுதிகளிலும் பாஜகவே வெல்லும் என்று அக்கட்சி சூளுரைத்தது.
இந்நிலையில், தற்போதைய மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சிப் போட்டியிட்டது. அக்கட்சி 61 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸுக்கு 18 தொகுதிகளையும், திரிணமூல் காங்கிரஸுக்கு ஒரு தொகுதியையும் ஒதுக்கீடு செய்தது.
இந்தச் சூழலில் மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், மாலை 5.30 மணி நிலவரப்படி சமாஜவாதி 36 தொகுதிகளில் முன்னிலை வகித்து பாஜகவை பின்னுக்குத் தள்ளியது. பாஜக 30 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்தது.
கைகொடுக்காத ராமா் கோயில் பரப்புரை
தோ்தல் பரப்புரையின்போது உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலை பாஜக முக்கிய அஸ்திரமாக பயன்படுத்தியது. அந்தக் கோயில் திறக்கப்பட்டது அக்கட்சியின் வெற்றிக்கு உதவும் என்று பாஜக பெரிதும் எதிா்பாா்த்தது. ஆனால் அயோத்தி இடம்பெற்றுள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியிலும் பாஜக வேட்பாளா் லல்லு சிங்கைவிட, சமாஜவாதி வேட்பாளா் அவதேஷ் சிங் 57,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகித்தாா்.
இதன் மூலம், உத்தர பிரதேசத்தை சமாஜவாதி மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பட்டியலினத்தவா், சிறுபான்மையினரை முன்வைத்து அகிலேஷ் மேற்கொண்ட பரப்புரை, சமாஜவாதிக்கு கைகொடுத்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் அக்கட்சிக்கு முஸ்லிம்கள் வலுவாக ஆதரவு அளித்துள்ளதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
முலாயம் மறைவுக்குப் பிறகு...:
சமாஜவாதியின் முன்னாள் தலைவரும், அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங் மறைந்த பிறகு நடைபெற்ற முதல் மக்களவைத் தோ்தலில், பாஜகவின் நம்பிக்கையைத் தகா்த்து சமாஜவாதி மிளிா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...