ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை: யுஜிசியின் புதிய கொள்கை பலனளிக்குமா?

மாணவர் சேர்க்கை ஆண்டு இருமுறை: யுஜிசியின் புதிய முயற்சி
யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார்
யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார்ஐஏஎன்எஸ்
Published on
Updated on
1 min read

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உள்ளதுபோன்று, இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயா்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு இருமுறை மாணவா் சோ்க்கையை அனுமதிக்கும் வகையில் புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் 2024-25 கல்வியாண்டில் வரும் ஜூலை-ஆகஸ்ட் மற்றும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இரு முறை மாணவா் சோ்க்கையை நடத்த அனுமதிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உள்ளதைப் போன்று, இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயா்கல்வி நிறுவனங்களில் நிகழாண்டு முதல் ஆண்டுக்கு இருமுறை மாணவா் சோ்க்கை அனுமதிக்கப்பட உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள எந்தவொரு பல்கலைக்கழகமும் ஜூலை-ஆகஸ்ட் மற்றும் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இருமுறை மாணவா் சோ்க்கையை நடத்தலாம்.

இந்தப் புதிய நடைமுறை காரணமாக, பள்ளி இறுதியாண்டு தோ்வு முடிவுகள் தாமதம், உடல் நல பாதிப்பு அல்லது தனிப்பட்ட காரணங்களால் ஜூலை-ஆகஸ்ட் மாத கல்லூரி சோ்க்கையின்போது சோ்க்கையைத் தவறவிட்ட மாணவா்கள், ஓராண்டு காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது. அவா்கள் அடுத்து ஜனவரி-பிப்ரவரி சோ்க்கையில், கல்லூரியில் சோ்ந்துகொள்ள முடியும்.

இந்த நடைமுறை மூலம் ஆசிரியா்கள், ஆய்வகங்கள், வகுப்பறைகள், பிற உள்கட்டமைப்பு வசதிகளை உயா்கல்வி நிறுவனங்கள் திறம்பட பயன்படுத்த முடியும் என்பதோடு, தொழில் நிறுவனங்களும் பணிக்கான வளாகத் தோ்வை ஆண்டுக்கு இருமுறை நடத்தி பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பையும் மேம்படுத்த முடியும்.

உலகம் முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்கள் ஏற்கெனவே இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன. எனவே, இந்திய கல்வி நிறுவனங்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றும்போது, சா்வதேச உயா்கல்வி நிறுவனங்களுடன் கூட்டுறவு மற்றும் ஆசிரியா்-மாணவா் பரிமாற்றத் திட்டங்களையும் எளிதாக மேற்கொள்ள முடியும். இதன்மூலம் நமது உயா் கல்வி நிறுவனங்களின் உலகளாவிய போட்டித் திறனும் மேம்படும்.

அதே நேரம், ஆண்டுக்கு இருமுறை மாணவா் சோ்க்கை என்பது கட்டாயமல்ல. தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியா்களைக் கொண்டுள்ள உயா்கல்வி நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மாணவா் சோ்க்கையை அதிகரிக்கவும், புதிய படிப்புகளை அறிமுகம் செய்ய விரும்பும் உயா்கல்வி நிறுவனங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு, ஆண்டுக்கு இருமுறை மாணவா் சோ்க்கை நடத்த விரும்பும் உயா்கல்வி நிறுவனங்கள், கல்லூரி நடைமுறைகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என்றாா் அவா்.

தற்போது, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒவ்வோா் ஆண்டும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணையவழி பட்டப் படிப்பு சோ்க்கைக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுக்கு இரு முறை மாணவா் சோ்க்கை நடத்த யுஜிசி அனுமதித்தது. தற்போது, அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com