பாஜக மீது கர்நாடக முதல்வர் காட்டம்!

கர்நாடகத்தின் மேல் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என கர்நாடக முதல்வர் குற்றச்சாட்டு
பாஜக மீது கர்நாடக முதல்வர் காட்டம்!

கர்நாடக அரசுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தும் நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மத்திய அரசு மீது குற்றம் சாட்டியதுடன், மத்திய அரசின் மீது போராட்டம் நடத்துமாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், கர்நாடக அரசு பெட்ரோல் மீதான விற்பனை வரியை ஜூன் 14ஆம் தேதி உயர்த்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.5 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக, பாஜக மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்தியது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய அரசின் நிதி மற்றும் மாநில திட்டங்களுக்கான நிதி வெளியீடு தொடர்பான விஷயங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கர்நாடகத்திற்கு அநீதி இழைத்துள்ளது. இந்த அநீதிக்கு எதிராக போராட்டங்களை நடத்துமாறு, கர்நாடக முதல்வர் சித்தராமையா பாஜகவுக்கு சவால் விடுத்தார்.

இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுவதாவது, ”முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 113 டாலராக இருந்தது; ஆனால், தற்போது 82.35 டாலராக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் போது, கச்சா எண்ணெய் விலை குறைந்து, பெட்ரோல் விலை உயர்ந்தது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, எரிவாயு சிலிண்டரின் விலை 410 ரூபாயாக இருந்தது; தற்போதைய ஆட்சியில் 1,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்ட பிறகும், இன்னும் 805.50 ரூபாயாக உள்ளது. எரிவாயு சிலிண்டரை 410 ரூபாயிலிருந்து 805 ரூபாயாக உயர்த்தியது யார்?. மத்திய அரசு ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்திய பிறகு, பெட்ரோல், டீசல், மதுபானம் மற்றும் மோட்டார் வரிகளைத் தவிர மற்ற வரிகளை உயர்த்தும் அதிகாரத்தை கர்நாடக அரசு இழந்தது.

மேலும் மாநிலத்திற்கு வருவாயும், மத்திய அரசின் நிதியுதவி பங்களிப்பும் குறைந்துவிட்டது. 15-வது நிதி ஆணையம் கர்நாடகத்திற்கு ரூ.5,495 கோடி வழங்க பரிந்துரைத்தது. இருந்தபோதிலும், கர்நாடகத்தின் ஜி.எஸ்.டி. பகிர்வு குறைந்து வருவதாகக் கூறி, மத்திய அரசு நிதி ஆணையத்தின் பரிந்துரையை மறுத்தது. பெங்களூருவில் புறவளைய சாலைக்கு ரூ.3,000 கோடியும், ஏரி மேம்பாட்டிற்காக ரூ.3,000 கோடியும் வழங்குவதாக அறிவித்த மத்திய அரசு, இதுவரையில் வழங்கவில்லை. ஆகையால், பாஜகவினர் யாருக்கு எதிராக போராட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக மீது கர்நாடக முதல்வர் காட்டம்!
மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா ஆலோசனை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com