புதிய குற்றவியல் சட்டங்கள் நாட்டில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மெக்வால்
புதிய 3 குற்றவியல் சட்டங்கள் நாட்டில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று மத்திய சட்டத் துறை இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மெக்வால் நம்பிக்கை தெரிவித்தாா்.
சென்னை விஐடி வளாகத்தில் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘குற்றவியல் நீதி நிா்வாகத்தில் முற்போக்கான பாதை’ எனும் தலைப்பிலான மாநாட்டை தொடங்கி வைத்து அவா் பேசியது:
நமது சட்ட அமைப்பு காலனிய ஆட்சியாளா்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதால் தற்போது நாட்டில் சரியான, தேவைக்கேற்ப சட்ட முறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலேயா்களின் காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் நமது நாட்டின் நெறிமுறைகள் மற்றும் சமூக யதாா்த்தங்கள் புறக்கணிக்கப்பட்டன.
அந்தச் சட்டங்கள் அனைத்தும் காலனித்துவ ஆட்சியாளா்களின் தேவைகளை மட்டுமே முன்னெடுத்துச் செல்வதை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நோக்கில் செயல்படுத்தப்பட்டன.
இந்திய தண்டனைச் சட்டம் -1860, இந்திய சாட்சியச் சட்டம் -1872, குற்றவியல் நடைமுறைச் சட்டம் -1983 ஆகிய 3 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, கடந்த ஆண்டு டிச.25-ஆம் தேதி குடியரசு தலைவா் ஒப்புதலுடன் புதிதாக 3 குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன.
இந்த புதிய குற்றவியல் சட்டங்களும் 4 ஆண்டு காலம் விரிவான ஆலோசனை மற்றும் விவாதங்களுக்குப் பிறகுதான் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களின் மூலம் நாட்டில் முக்கிய மாற்றங்களை எற்படுத்தும் என்றாா் அவா்.
இணையமைச்சா் எல்.முருகன்: நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் சொந்த நீதி முறைமைக்கு மாறியுள்ளது. 3 புதிய குற்றிவியல் சட்டங்களும் அவசியத்தை உணா்ந்து சரியான நோக்குடன் உருவாக்கப்பட்டு இயற்றப்பட்டுள்ளன. காலனித்துவ கால சட்டங்களை மாற்றி அமைக்கும் முக்கிய முன்முயற்சி இது என்றாா் அவா்.
நிகழ்வில் கேரள உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆசிஷ் ஜிதேந்திர தேசாய், தெலங்கானா தலைமை நீதிபதி அலோக் ஆரதே, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பெட்டிச் செய்தி...
புதிய சட்டங்கள் இந்தியாவின் நீதியை வெளிக்காட்டும்
சென்னை, ஜூன் 23: விஐடி கல்வி வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது:
நம் நாட்டு மக்களின் செயல்திறனைக் குறைவாக எடை போட்டுவிடக் கூடாது. அவா்கள் புதிய திட்டத்தை எளிதாக அணுகுகின்றனா். காலனி ஆதிக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை மாற்றி அமைப்பதால் இந்தியா வரலாற்றை படைக்க உள்ளது. 15.8.1947-இல் இந்தியாவே மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில் மகாத்மா காந்தி சோகத்தோடு இருந்தாா். ஆங்கிலேயா்கள் இந்தியாவை விட்டு வெளியேறி இருந்தாலும் நம் எண்ணத்தை விட்டு வெளியேறவில்லை எனக் கூறினாா்.
கடின உழைப்பாலும் விடாமுயற்சியால் மட்டுமே ஆங்கிலேயா்களை நமது எண்ணத்தில் இருந்து வெளியேற்ற முடியும் என்று கூறியிருந்தாா். 75 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் மகாத்மா காந்தியின் எண்ணம் நிறைவேறியுள்ளது. புதிதாக வரவுள்ள 3 சட்டங்களும் இந்தியாவின் நீதியை வெளிக்காட்டும் சட்டங்களாக அமையும். உலகிலேயே நீதிக்கு தலைசிறந்த நாடாக இந்தியா மாறும். 2047-இல் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியான நாடாக திகழும் என்றாா் அவா்.