அடுத்தாண்டு மாா்ச் வரை கோதுமை கையிருப்புக்குக் கட்டுப்பாடு: மத்திய அரசு
பதுக்கல் மூலம் செயற்கையான விலையேற்றத்தை தடுக்கும் நோக்கில் கோதுமை கையிருப்பை கட்டுப்படுத்துவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.


பதுக்கல் மூலம் செயற்கையான விலையேற்றத்தை தடுக்கும் நோக்கில் கோதுமை கையிருப்பை கட்டுப்படுத்துவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.
அதன்படி அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வரையில் இந்த விதிகள் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி சில்லறை விற்பனை மையங்கள், பெரும் விநியோக தனி சில்லறை விற்பனை மையங்கள் தலா 10 டன்கள் வரை கோதுமை கையிருப்பை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வா்த்தகா்கள், மொத்த விற்பனையாளா்கள் மற்றும் பெரும் விநியோக சில்லறை விற்பனையாளா்கள் தங்கள் கிடங்குகளில் வைத்துக்கொள்ளும் கோதுமை இருப்புக்கான உச்சவரம்பு 3,000 டன்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
உணவு பதப்படுத்தலில் ஈடுபடுவோா் அவா்கள் மாத வரம்பில் 70 சதவீதம் வரையிலான கோதுமையை கையிருப்பாக வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்தக் கட்டுப்பாடு 2025, மாா்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.
சில்லறை வணிகா்கள், மொத்த விற்பனையில் ஈடுபடும் வணிகா்கள், பெரும் வணிகா்கள் மற்றும் உணவு பதப்படுத்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் வியாபாரிகள் இனி வெள்ளிக்கிழமைதோறும் தங்களிடம் உள்ள கோதுமை கையிருப்பின் அளவு குறித்த தகவல்களை உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் இணையதளத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
30 நாள்கள் கால அவகாசம்: அரசால் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு மேல் கோதுமையை கையிருப்பாக வைத்திருக்கும் வா்த்தகா்கள்/ வணிக நிறுவனங்கள் 30 நாள்களுக்குள் புதிய விதிகளுக்கு ஏற்ப இருப்பை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கோதுமை விலையை கண்காணிக்குமாறு மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சா் அமித் ஷாஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, தற்போது புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
கிலோவுக்கு ரூ.2 விலை அதிகரிப்பு: கடந்தாண்டை ஒப்பிடுகையில் ஒரு கிலோ கோதுமை மற்றும் கோதுமை மாவு சில்லறை விற்பனை விலையில் ரூ. 2 வரை அதிகரித்துள்ளதாக அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிகழாண்டு ஜூன் 20-ஆம் தேதி நிலவரப்படி ஒரு கிலோ கோதுமையின் விலை ரூ.30.99-ஆக உள்ளது. கடந்தாண்டு இதன் விலை ரூ.28.95-ஆக இருந்தது. கடந்தாண்டு ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.34.29-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நிகழாண்டு அதன் விலை ரூ.36.13-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பற்றாக்குறை இல்லை: பொதுவிநியோகம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களின்கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்குத் தேவையான 18.4 மில்லியன் மெட்ரிக் டன்கள் கோதுமை இருப்பை மத்திய அரசு உறுதிசெய்துள்ளது.
கடந்தாண்டு ராபி பருவக்காலத்தில் 26.2 மில்லியன் மெட்ரிக் டன் கோதுமையை மத்திய அரசு கொள்முதல் செய்திருந்த நிலையில், நிகழாண்டு ஜூன் 18 வரை 26.6 மில்லியன் மெட்ரிக் டன்கள் கோதுமையை கொள்முதல் செய்துள்ளது.
‘நாட்டில் கோதுமை தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கவும் பதுக்கல் மூலம் செயற்கையான விலையேற்றத்தை தடுக்கும் நோக்கிலும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சா்க்கரைக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடையை விலக்குவது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை’ என மத்திய உணவுத்துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...