
பன்றிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான 160-க்கு மேற்பட்ட பன்றிகள் கடந்த இருநாள்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிசோரமில் பிப்ரவரியில் உருவான ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ஏஎஸ்எஃப்) தொற்றினால் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3,350-க்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
எளிதில் தொற்றக்கூடிய இந்த காய்ச்சல் பரவலை தடுக்க குறைந்தது 300-க்கும் மேற்பட்ட பன்றிகள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டதாவும் இந்தாண்டு கொல்லப்பட்ட பன்றிகள் எண்ணிக்கை 6,504 எனவும் கால்நடை பராமரிப்பு மற்றும் விலங்குநலத் துறை தெரிவித்துள்ளது.
ஐச்வால், சாம்பே, லுங்லேய், சைசுவல், காவ்சால் மற்றும் செர்ச்சிப் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள 120 கிராமங்களில் உள்ள பன்றிகள் இந்த ஆப்பிரிக்க தொற்றுக்கு ஆளானதாக தெரிவிக்கப்படுகிறது.
2021-ம் ஆண்டில் 33,420 பன்றிகள் மற்றும் பன்றிக்குட்டிகள் இதனால் இறந்ததாகவும் 2022-ல் 12,800 பன்றிகளும் 2023-ல் 1,040 பன்றிகளும் இந்தத் தொற்றினால் இறந்துள்ளன.
மிசோரமில் முதல் தொற்று 2021 மார்ச்சில் பதிவானது. வங்கதேச எல்லையில் உள்ள லுங்சென் கிராமத்தில் பதிவானது. அதுமுதல் ஆண்டுதோறும் பரவல் ஒவ்வொருமுறையும் புதிதாக ஏற்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பன்றிகள் விற்கப்படுவதை அரசு தடை செய்துள்ளது. மேலும் இறக்குமதிக்கும் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வெப்பம் அதிகரிக்கும்போது மற்றும் மழைக்கு முன்பான பருவத்தில் இந்த தொற்று பரவல் இருப்பதாகவும் பன்றிகள் இழப்புக்குள்ளான 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அருகிலுள்ள மியான்மர், வங்கதேசம் மற்றும் வடகிழக்கி மாநிலங்களில் இருண்டு கொண்டுவரப்பட்ட பன்றிகளால் இந்த தொற்று உருவாகியிருக்கும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களில் பன்றி இறைச்சி பழங்குடி மற்றும் பழங்குடியினமல்லாத மக்களால் அதிகம் நுகரப்படும் பொருளாகும்.
கடும் தேவையால் இந்த பிராந்தியங்களில் பன்றிக் கறி ஆண்டு விற்பனை ரூ.8 ஆயிரம் முதல் ரூ,10 ஆயிரம் கோடி வரை நடைபெறும். அஸ்ஸாம் அதிகம் பன்றிகள் வளர்க்கும் மாநிலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.