டேங்கர் லாரியில் வாயு கசிவு: சுவாசித்த கல்லூரி மாணவிகள் மயக்கம்!

ஹைட்ரோகுளோரிக் வாயு காற்றில் பரவியதால் அதை செவிலியர் கல்லூரி மாணவிகள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதி!
டேங்கர் லாரியில் வாயு கசிவு: சுவாசித்த கல்லூரி மாணவிகள் மயக்கம்!
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

டேங்கர் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட ஹைட்ரோகுளோரிக் அமிலம் கசிந்ததால் அதை சுவாசித்த மாணவிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்திலிருந்து எர்ணாகுளம் நோக்கி ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றிச் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று கேரளத்தின் கண்ணூர் மாவட்டம் ராமாபுரம் அருகே வெள்ளியன்று(ஜூன் 28) மாலை சென்று கொண்டிருந்தபோது, லாரியின் டேங்கரில் பின்புறத்தில் ஓட்டை ஏற்பட்டு அதன் வழியே ஹைட்ரோகுளோரிக் அமிலம் கசிந்ததால் காற்றில் அதன் வாயு பரவியது.

இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே இருந்த செவிலியர் கல்லூரியில் உள்ள மாணவிகள் இதை சுவாசித்ததால், மாணவிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மாணவிகள் சிலர் மயக்கமடைவதைக் கண்ட சக மாணவிகள் உடனடியாக தகவல் தெரிவித்த்ததைத் தொடர்ந்து, மயக்கமடைந்த மாணவிகள் அனைவரும் பழயங்காடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மாணவிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் அமிலம் வெளியே கசியாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். பாதுகாப்பு கருதி, சம்பவ இடத்தை சுற்றி 1 கி.மீ. சுற்றளவில் வசித்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், அமிலக் கசிவை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், லாரி ஆள்நடமாட்டமிலாத பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு வாயுக்கசிவு ஏற்பட்ட லாரியிலிருந்து ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை வேறு டேங்கர் லாரியில் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com