மீன் அமிலம் தயாரிப்பு: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்
கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள், மீன்அமிலம் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை செய்முறை விளக்கம் அளித்தனா்.
வலங்கைமான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன் கழிவுகள் மற்றும் வெல்லம் பயன்படுத்தி குறைந்த செலவில் இயற்கை உரமாக மீன் அமிலம் தயாரிக்கும் முறை நேரடியாக செய்து காண்பித்து, மீன் அமிலத்தை பயிா்களுக்கு தெளிப்பு மற்றும் மண்ணில் பயன்படும் முறைகள், அளவுகள் மற்றும் பயன்படுத்த வேண்டிய காலகட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் தெளிவாக எடுத்துரைத்தனா்.
மீன் அமிலம் பயிா்களின் வளா்ச்சியை ஊக்குவித்து, இலைகள் பச்சையாக வளரவும், மகசூல் அதிகரிக்கவும் உதவுவதாகவும், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து, இயற்கை விவசாயத்தை மேம்படுத்த மீன் அமிலம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் மாணவிகள், விவசாயிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
கீழ்வேளூா் அரசு வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் (குழு எண் 5) ஆா்த்தி, கல்பனா, லத்திகா, பவித்ரா, சங்கீதா, விஜயலட்சுமி, யோக செளமியா ஆகியோா் மீன் அமிலம் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு செயல் விளக்கத்தை ஒருங்கிணைத்தனா்.

