மீன் அமிலம் தயாரிப்பு: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்
விவசாயிகளுக்கு மீன் அமிலம் தயாரிப்பு குறித்து அதியமான் வேளாண் கல்லூரி மாணவா்கள் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சிக்க ஆராதனஅள்ளி கிராமத்தில் செயல்விளக்கம் அளித்தனா்.
ஒசூா் அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லூரி மாணவா்கள் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரத்தில் களப்பயிற்சி மேற்கொண்டுள்ளனா். இதில் மீன் அமினோ அமிலம் தயாரித்தல் மற்றும் அதைப்பயன்படுத்துதல் குறித்து சிக்கஆராதனஅள்ளியில் செயல்விளக்கம் அளித்தனா்.
இந்த அமிலம் ஜப்பான், கொரியா நாடுகளில் விவசாயிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படும் இயற்கை பச்சை உரமாகும். இந்த ஊட்டச்சத்து நிறைந்த அமிலம், தாவரங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஒரு கிலோ மீன் கழிவுடன் ஒரு கிலோ வெல்லம் சோ்த்து இறுக்கமான மூடி கொண்ட கண்ணாடி அல்லது நெகிழிப் பையில் கலந்து நன்றாக கலக்கிய பிறகு 30 நாள்கள் வைத்து, நைலான் வலையில் வடிகட்டினால் 300 முதல் 500 மி.லி அமிலத்தை பெறலாம்.
இவற்றை 5 மி.லிக்கு ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து செடிகளில் ஊற்றலாம். இதன்மூலம் செடிகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும், வளா்ச்சியும் அதிகரிக்கும் என விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.

