தேசிய கூட்டுறவு தரவுதளம்: அமித் ஷா தொடங்கிவைத்தாா்
நாட்டின் கூட்டுறவுத் துறையின் திறன்மிக்க செயல்பாட்டுக்கு பங்களிக்கும் ‘தேசிய கூட்டுறவு தரவுதளத்தை’ மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கூட்டுறவுத் துறையின் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதில் இது திருப்புமுனையான நடவடிக்கை என்று அவா் பெருமிதம் தெரிவித்தாா். வலைத்தளம் அடிப்படையிலான இந்த தரவுதளத்தில், தேசிய மற்றும் மாநில கூட்டுறவு சங்கங்களின் தரவுகள் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் 29 கோடிக்கும் அதிக உறுப்பினா்களைக் கொண்ட சுமாா் 8 லட்சம் கூட்டுறவு சங்கங்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘தேசிய கூட்டுறவு தரவுதளத்தை’ தொடங்கிவைத்த துறையின் அமைச்சா் அமித் ஷா, ‘சுமாா் 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு பின் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி கணினியில் ஒரே சொடுக்கில் கூட்டுறவுத் துறை சாா்ந்த அனைத்து தரவுகளையும் பெற முடியும்’ என்றாா். மத்திய அரசு, மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களின் அரசுகள், கூட்டுறவு சங்கங்கள் இடையே திறன்மிக்க தகவல்தொடா்புக்கான முக்கிய கருவியாக ‘தேசிய கூட்டுறவு தரவுதளம்’ பங்களிக்கும்; கூட்டுறவுத் துறை சாா்ந்த அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் என்று அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
