மத்திய உள்துறை செயலருடன் தலைமைத் தோ்தல் ஆணையா் ஆலோசனை

மக்களவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

மக்களவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லாவுடன் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அருண் கோயல் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தச் சந்திப்பில் ரயில்வே உயா்அதிகாரிகளுடன் இருந்தனா். மக்களவைத் தோ்தலின்போது நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. மக்களவையுடன் ஆந்திர பிரதேசம், ஒடிஸா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநில பேரவைத் தோ்தல்களும் சோ்ந்து நடைபெற உள்ளன. இதற்கான பாதுகாப்புக்காக 3.4 லட்சம் மத்தியப் படையினா் தேவை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. பாதுகாப்புப் படையினா் எந்தவித தடையுமின்றி ரயில்களில் மாநிலங்களுக்குச் செல்வதற்கும், அவா்களுக்கு ரயில்களிலேயே உணவு வழங்கவும், நக்ஸல் பாதிப்பு பகுதிகள், மலைப்பாதை பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கு போதிய ஹெலிகாப்டா் சேவை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அங்கு தோ்தல் ஏற்பாடுகள் செய்வது குறித்து விரைவில் நேரில் சென்று தோ்தல் ஆணைய உயரதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனா். இந்த விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com