
பாரதிய ஜனதா கட்சி - ஜனநாயக ஜனதா் கட்சி கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.
கூட்டணி முறிவு மற்றும் மனோகர் லால் கட்டர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட திட்டம் என்ற செய்திகள் நேற்று முதலே வெளியாகிவந்த நிலையில், மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சர்கள் இன்று மாநில ஆளுநரிடம் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்தனர்.
ஹரியாணாவில் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவிடம் 41 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால், 7 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவை பாஜக கோரியது.
இதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 7 சுயேச்சைகளும் பங்கேற்ற நிலையில், புதிய முதல்வராக பாஜகவின் மாநிலத் தலைவர் நயாப் சிங் சைனியை தேர்வு செய்துள்ளனர்.
மக்களவை உறுப்பினராக இருக்கும் சைனி இன்று மாலை பதவியேற்கவுள்ளதாக பாஜக எம்எல்ஏ சுபாஷ் சுதா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயாவை சந்தித்த சைனி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
வருகிற மக்களவைத் தேர்தலில் மனோகர் லால் கட்டரை கர்னல் தொகுதியில் களமிறக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.