காலியாகவுள்ள இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவிக்கு புதிய அதிகாரிகளை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பிற்பகலில் ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
ஏற்கெனவே தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வுபெற்றதை தொடர்ந்து, அவரது பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார்.
இதற்கிடையே, மத்திய அரசின் புதிய சட்டத்தின்படி தேர்தல் ஆணையரை நியமிக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
அதற்கு முன்னதாகவே, புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.
பிரதமர் இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதீர் ரஞ்சன் செளத்ரி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நேற்று மாலை பிரதமரை சந்தித்த அர்ஜூன் மேக்வால், இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு 5 பேர் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
அந்த பட்டியலில் ஐஏஎஸ் அதிகாரிகள் அமிதாப் காந்த், தருண் பஜாஜ், அஜய் பூஷண் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குழு பரிந்துரைக்கும் இரண்டு தேர்தல் ஆணையர்களின் பெயர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவரின் ஒப்புதலுக்கு பிறகு அறிவிக்கப்படும்.
உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு என்ன?
தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் 2023-ம் படி தேர்தல் ஆணையரை நியமிக்க தடைக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாகூர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முறையிட்ட நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்த நிலையில், கடந்தாண்டு மத்திய அரசு திருத்தம் செய்த சட்டத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரை குழுவில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.